திருமங்கலத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கல்வீசிய கல்லூரி மாணவர் கைது
திருமங்கலத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
ரெயில் மீது கல்வீச்சு
செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. சம்பவத்தன்று இந்த ரெயில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு சுமார் 9.15 மணியளவில் திருமங்கலம் ரெயில் நிலையத்தை கடந்தபோது, ரெயில் பெட்டிகளின் மீது கற்கள் வீசப்பட்டன.
இதில், ரெயிலில் பயணம் செய்த 2 பெண்களுக்கு காயம் ஏற்பட்டு, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கல்லூரி மாணவர் கைது
விசாரணையில் திருமங்கலம் கூழையாபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் முத்துமுனியாண்டி(வயது 21) என்பவர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று கைது செய்த மதுரை ரெயில்வே போலீசார், மதுரை 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான முத்துமுனியாண்டி கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது, இந்திய தண்டனை சட்டம் 324, 336-வது பிரிவுகள் மற்றும் ரெயில்வே சட்டம் 152-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த ஓரிரு தினங்களில் சம்பந்தப்பட்டவரை கைது செய்த போலீசாரை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னுசாமி பாராட்டினார்.