பள்ளி மாணவர்களுக்கு 'கல்வியும்-காவலும்' புதிய திட்டம்


பள்ளி மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் புதிய திட்டம்
x

பள்ளி மாணவர்களுக்கு ‘கல்வியும்-காவலும்’ புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பன்னீர் தெளித்து வரவேற்பு

தமிழகத்திலேயே முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசார் சார்பில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு 'கல்வியும்-காவலும்' என்ற விழிப்புணர்வு புதிய திட்ட தொடக்க விழா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு வந்த 9, 11-ம் வகுப்பு மாணவிகளை போலீசார் பன்னீர் தெளித்து, ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், அங்கு பணிபுரியும் ஒவ்வொரு போலீசாரின் பொறுப்புகள் பற்றியும் எடுத்து கூறினார்.

துப்பாக்கிகள் குறித்து...

மேலும் அவர் காவல் துறையில் இயங்கும் விரல் ரேகை பிரிவு, மோப்ப நாய் படை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் காவல் துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்து கூறினார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மாணவிகளிடையே பேசுகையில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காவல் துறை மக்களின் நண்பன் என்பதை உணர்த்துவதற்காகவும், காவல் துறையினரின் அன்றாட செயல்பாடுகள் குறித்து எளிதில் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதுவே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

எதற்கும் அச்சப்பட்டு தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை பெற்றோர்களிடம் கூறாமல் இருக்கக்கூடாது. அவ்வாறு தங்களுக்கு கூற இயலாத சூழ்நிலையில் போலீஸ் நிலையம் வந்து நேரடியாக புகார் அளிக்கலாம். போலீஸ் நிலையம் என்றும் மாணவர்களுக்காக கடமையாற்ற காத்திருக்கிறது. மேலும் இந்த கல்வியும் காவலும் திட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் போலீஸ் நிலையங்களுக்கு மாணவ-மாணவிகளை வரவழைத்து மேற்படி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட உள்ளது, என்றார்.

போட்டிகள் நடத்தப்படும்

இந்த திட்டம் தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்படும். அந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாவட்டம் முழுவதும் நேற்று போலீஸ் நிலையங்களில் நடந்த இந்த கல்வியும், காவலும் திட்டத்தில் சுமார் 400 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், வேலுமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசுவரன், விஜயலட்சுமி மற்றும் போதை மற்றும் மனநல மருத்துவர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story