கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம்


கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம்
x

‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷம் முழங்க, கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

கல்யாண நரசிங்க பெருமாள்

குஜிலியம்பாறை அருகே ராமகிரியில், மிகவும் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. திருமண கோலத்தில் இங்கு உள்ள நரசிம்மரை வணங்கினால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து கடந்த 4-ந்தேதி இரவு நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் மகா உற்சவ விழா நடந்தது.

பங்குனி தேரோட்டம்

இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக கோவில் சன்னிதானத்தில் எம்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சாமி சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது.

பின்னர் காலை 9.10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தேர் வீதி உலா வந்தது. அதன்பிறகு காலை 10.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) புஷ்பயாக உற்சவம் பூர்த்தி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் வி.கே.ஏ.கருப்பணன், செயல் அலுவலர் முருகன், அறநிலையத்துறை ஆய்வாளர் (குஜிலியம்பாறை சரகம்) ராஜலட்சுமி, கோவில் மணியக்காரர் சதாசிவம், மூத்த அர்ச்சகர் ராமகிருஷ்ணன், அர்ச்சகர்கள் ராஜேஷ், ரமேஷ், கோவில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேரோட்டம் நடைபெறுவதையொட்டி வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story