கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்


கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்
x

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கரூர்

புரட்டாசி பெருந்திருவிழா

கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பெருந்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து இந்தாண்டு தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கியது.

பின்னர் கடந்த மாதம் 27 -ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமந்தவாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்பக விமானம், குதிரை வாகனம் உள்ளிட்டவற்றில் தினமும் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் கடந்த 3 -ந்தேதி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

அன்று இரவு புஷ்பக விமானத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதனிடையே நேற்று முன்தினம் காலை பல்லக்கிலும், மாலையில் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதனையொட்டி கல்யாண வெங்கடரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் கல்யாண வெங்கடரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆலய மண்டபத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து எழுந்தருளினார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பினர். தேர் கோவிலை சுற்றி 4 முக்கிய வீதிகள் வழியாக ஆடி, அசைந்தபடி வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடி நின்ற பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

திரளான பக்தர்கள்

இதில் கரூர், தாந்தோணிமலை, திருமாநிலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட போலீசார் செய்திருந்தனர். பக்தர்களின் வசிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.


Next Story