கல்யாணி யானை குளிக்க ரூ.60 லட்சத்தில் புதிய குளியல்தொட்டி


கல்யாணி யானை குளிக்க ரூ.60 லட்சத்தில் புதிய குளியல்தொட்டி
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமான கல்யாணி யானை குளிப்பதற்காக ரூ.60 லட்சத்தில் புதிதாக குளியல் தொட்டி கட்டப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பேரூர்

பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமான கல்யாணி யானை குளிப்பதற்காக ரூ.60 லட்சத்தில் புதிதாக குளியல் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் சேகர்பாபு நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார்.

பேரூர் பட்டீசுவரர் கோவில்

கொங்கு மண்டலத்தில் உள்ள சிவன் தலங்களில், மிக பழமை யும், வரலாற்று சிறப்பும் கொண்டது கோவையை அடுத்த பேரூர் பட்டீசுவரர் கோவில். இங்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கல்யாணி யானை உள்ளது. இது கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அதை பாகன் ரவி பராமரித்து வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் கல்யாணி யானை உள்ளது. அதற்கு தற்போது 32 வயதாகிறது.

ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

இந்த நிலையில், பேரூர் கல்யாணி குளிக்க குளியல் தொட்டி கட்டவும், நடைபயிற்சி மேற்கொள்ள தளம் அமைக்கவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குளியல் தொட்டி அமைக்க கோவிலுக்கு அருகே உள்ள அங்காளம்மன் கோவிலின் பின்பகுதி யில் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப் பட்டது.

அங்கு கல்யாணி யானை குளிக்க பெரிய அளவிலான குளியல் தொட்டி கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது அது இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது. அது போல் யானை நடை பயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதை அமைக்கப் பட்டு வருகிறது.

3 மணி நேரம் குளிக்கும்

இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-

பேரூர் கோவில் வளாகத்தில் உள்ள கொட்டகையில் யானை கல்யாணி கட்டப்படுகிறது. அது கோ பூஜை, கஜ பூஜைக்காக அழைத்து வரப்படும். மேலும், கோவிலின் வெளிப்பிரகார வளாகத்தில் காலை, மாலையில் குளிக்க வைக்கப்படும். இதனால் மிக குறைந்த நேரம் மட்டுமே யானை குளிக்க முடிகிறது.

எனவே, யானையை நன்றாக குளிப்பாட்டவும், நடைபயிற்சி செய்யவும் போதிய இடவசதி இன்றி இருந்தது. எனவே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.60 லட்சத்தில் குளியல் தொட்டி மற்றும் நடைப்பயிற்சி பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

யானை குளியல் தொட்டியை நாளை (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் சேகர்பாபு திறந்து வைக்கிறார். இதன் மூலம் கல்யாணி யானை 3 மணி நேரம் வரை தொட்டியில் நன்றாக குளியல் போடும். தினமும் 10 கி.மீட்டர் தூரம் வரை நடைபயிற்சி மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story