நுகர்பொருள் வாணிப கிடங்கில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொங்கல் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 635 ரேஷன் கடைகளின் மூலம் 3 லட்சத்து 93 ஆயிரத்து 204 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.
இந்த பணிகளை காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பங்காரும்மன் தோட்டம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வினியோகிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ரேஷன்கார்டுதாரர்களுக்கு டோக்கன்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து சிறுகாவேரிபாக்கம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொங்கல் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சத்தியவதிதேவி, பொது வினியோக திட்ட துணை பதிவாளர் மணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.