காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா
காஞ்சீபுரத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சீபுரம்:
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் ஸ்ரீபரமேஸ்வர விண்ணகரம் எனும் பெயர் பெற்றதுமான வைகுந்தவல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 26-ம்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான இன்று கருடசேவை உற்சவம் நடைபெற்றது. கருடசேவை உற்சவத்தை ஒட்டி வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் கருட ஆழ்வார் மீது எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து வைகுந்த பெருமாளுக்கு சிறப்பு தூப தீப ஆராதனை செய்யப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க காஞ்சீபுரம் நகரின் ராஜ வீதிகளில் உலா வந்தார்.
கருட சேவை உற்சவத்தில் காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வைகுந்த பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.