கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 10:46 AM GMT)

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 2-ந் தேதி சப்பர பவனி நடக்கிறது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 2-ந் தேதி சப்பர பவனி நடக்கிறது.

கண்டதேவி திருவிழா

தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த 10 நாட்களும் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். இந்தாண்டு விழா நேற்று காலை கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக கோவில் கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன், பிரியாவிடை எழுந்தருளினர்.

முன்னதாக கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து, கொடிமரம் அருகே சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 7.50 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்தில் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. .

சப்பர பவனி

புதிய தேர் தாயரான நிலையில் இந்த ஆண்டு திருவிழா உடனடியாக தொடங்கியதால் புதிய தேர் வெள்ளோட்டத்திற்கு போதிய காலஅவகாசம் இல்லை. எனவே இந்தாண்டும் வருகிற 2-ந்தேதி அன்று தேரோட்டத்திற்கு பதிலாக சப்பர பவனியே நடைபெறுகிறது.

நேற்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் கிராம மக்கள் கலந்துெகாண்டனர். தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story