காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணி
காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணி இந்த மாத இறுதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறையினர் தீவிரம்
தளி
காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த மாத பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காண்டூர் கால்வாய்
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையின் மூலமாக பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மூலம் நீர்வரத்து ஏற்படுகிறது. மேலும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
. ஆண்டுக்கு 10 மாதங்கள் நீர்வரத்து இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கால்வாயானது மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தின் போது பாறைகளால் சேதமடைந்து வந்தது. எனவே கால்வாயை புதுப்பிக்க கோரி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காண்டூர் கால்வாயை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பணி நடைபெற்று வருகிறது.
சீரமைப்பு பணி
இதற்கிடையில் கல்குவாரிகள் வேலை நிறுத்தம் மழைப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் கால்வாய் சீரமைப்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் இருப்பில் உள்ள மூலப் பொருட்களைக் கொண்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் மழைப்பொழிவு நின்று விட்டதுடன் கல்குவாரி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் பணிகள் மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. இந்த மாத இறுதிக்குள் கால்வாய் பணியை முடித்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பாசனப்பரப்புகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.