பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும்தெருநாய்களால் பயணிகள் அவதி


பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும்தெருநாய்களால் பயணிகள் அவதி
x
திருப்பூர்


காங்கயம் பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தெருநாய்கள் தொல்லை

காங்கயம் வழியாக திருப்பூர், கோவை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் ஈரோடு, பழனி, தாராபுரம் உள்பட பல்வேறு ஊர்களுக்கும் 500-க்கும் அதிகமான பஸ்கள் சென்று வருகின்றன. காங்கயம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.

இதனால் காங்கயம் பஸ்நிலையத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் மிகுந்து காணப்படும். இந்த நிலையில் காங்கயம் பஸ்நிலையத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அங்கு வரும் பயணிகளை கும்பலாக சேர்ந்து கடிக்க வருகின்றன. இதனால் பயணிகள் தங்கள் உயிருக்கு பயந்து ஓடுகின்றனர்.

பயணிகள் அவதி

அப்போதும் விடாமல் அவர்களை துரத்தும் நாய்களிடம் சிலர் கடி வாங்கியுள்ளனர். சிலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. பஸ்நிலையத்திற்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகளின் நிலை அதைவிட பரிதாபம். பஸ்நிலையம் மட்டுமின்றி காங்கயத்தின் பல தெருக்களில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் தெருநாய்கள் பதம் பார்த்துவிடுகின்றன.

பல சமயங்களில் இருசக்கர வாகனங்களுக்குள் விழுந்தும், வாகன ஓட்டிகளை கீழே விழச்செய்தும் காயம் மற்றும் எலும்பு முறிவினை ஏற்படுத்துகின்றன. இந்த தெருநாய்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து பொதுமக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் காங்கயம் பஸ்நிலையம் மற்றும் தெருக்களுக்குள் செல்ல வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து காங்கயம் பஸ்நிலையம் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க வேண்டும். அதோடு அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என காங்கயம் பகுதியை சேர்ந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-------


Next Story