நீதிபதிகள் முன்னிலையில் இணைந்த தம்பதி
காங்கயத்தில் கருத்துவேறு பாடு காரணமாக 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி நீதிபதி முன்னிலையில் இணைந்தனர்.
மக்கள் நீதிமன்றம்
காங்கயம் வட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மூலம் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது.
காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் பங்கேற்றனர்.
இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து வழக்குகள், மோட்டார் வாகன சிறு வழக்குகள் என மொத்தம் 17 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 14 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதில் ரூ.59 லட்சத்து 9 ஆயிரத்து 140 மதிப்புக்கு தீர்வு காணப்பட்டது.
இணைந்த தம்பதியினர்
காங்கயம் கல்லேரி பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது37). இவரது மனைவி யசோதா தேவி (31). இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு மேல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்த விவாகரத்து வழக்கானது நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம், சேர்ந்து வாழ சம்மதித்தனர். இதையடுத்து நீதிபதிகள் முன்னிலையில் தம்பதியர் இருவரும் இணைந்தனர்.