ஓட்டப்பிடாரம் அருகே ரூ.30 லட்சத்தில் சமுதாய நல கூடத்துக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்


ஓட்டப்பிடாரம் அருகே ரூ.30 லட்சத்தில் சமுதாய நல கூடத்துக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
x

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.30 லட்சத்தில் சமுதாய நல கூடத்துக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.30லட்சத்தில் புதிதாக கட்டப்பட உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினாா்.

புதிய சமுதாய நலகூடம்

ஓட்டப்பிடாரம் தாலுகா குலசேகரநல்லூர் காமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் சமுதாய நலக்கூட கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் கவுன்சிலர் மோட்டையச்சாமி, குலசேகரநல்லூர் பஞ்சாயத்து தலைவர் வேலாயுதசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கனிமொழி எம்.பி, ரூ.30 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

திருமண நிகழ்ச்சிக்கு...

கோரோனா காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி நிறுத்தப்பட்டது இதனால் உடனடியாக சமுதாய நலக்கூடம் செய்து கொடுக்க முடியாமல் போய்விட்டது. இப்பொழுது மறுபடியும் நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை மத்திய அரசு கொடுத்து உள்ளது. இந்த கூடத்தை திருமண நிகழ்ச்சி நடத்த பயன்படுத்தாமல், மாணவர்கள் முன்னேற்றத்திற்காக வகுப்புகள் நடத்தவும், பெண்கள் சுய உதவி குழுக்கள் பயிற்சி நடத்த பயன்படுத்த வேண்டும். மேலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் பயன்படுத்த வேண்டும். இது அரசு பணத்தால் கட்டக்கூடிய நலக்கூடம். அதனால் அனைவருக்கும் பொதுவான சமூக நலக்கூடம். மக்களை மதம் சார்ந்தோ, சாதிைய பயன்படுத்தியோ பிரிக்கக் கூடாது. இது திராவிட இயக்கத்தின் தலைவர்களின் முக்கிய கனவாகும். இதையெல்லாம் நாம் தாண்டி வரவேண்டும். சமூக விழிப்புணர்வு பெறவேண்டும். ஆண், பெண் வித்யாசம் இல்லாமல் சமத்துவமாக இருக்கவேண்டும். பிரிவினை தாண்டி நம்முடைய அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல எதிர்காலம் சுயமரியாதையோடு இருக்கக்கூடிய எதிர்காலம் இருக்கவேண்டும். பெண்கள் முன்னேற வேண்டும் சுயமாக வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காகத்தான் திருமண உதவித் திட்டத்தை பெண்களின் உயர் கல்வி திட்டமாக தமிழக அரசு மாற்றி உள்ளது, என்றார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் சண்முகநாதன், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் லீமாரோஸ், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, யூனியன் உதவி பொறியாளர்கள் காயத்திரி, ரவி, கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் மேட்டூர் இலவச தொகுப்பு வீடு, பாஞ்சாலங்குறிச்சியில் பஞ்சாயத்து சார்பில் வளர்க்கப்படும் அடர்ந்த காடுகளை மற்றும் ஊராட்சி சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி பார்வையிட்டார்.


Next Story