கனிமொழி எம்.பி. தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு
நிலக்கோட்டை பகுதியில் மத்திய, மாநில அரசு திட்ட பணிகளை கனிமொழி எம்.பி. தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
கனிமொழி தலைமையில் குழு
நாடாளுமன்ற நிலைக்குழு (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) தலைவர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழுவினர், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 2 நாட்கள் பயணமாக நேற்று வருகை தந்தனர்.
இந்த குழுவில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பி. சின்ராஜ், ராஜ்வீர் டீலர், நரேந்திரகுமார், தலாரி ரங்கய்யா, ஷியாம் சிங் யாதவ், எம்.அப்துல்லா சிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் எத்திலோடு ஊராட்சியில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தை நிலைக்குழுவினர் பார்வையிட்டனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை பார்வையிட்டனர்.
மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அளிக்கப்படும் தொழிற்பயிற்சிகள், வங்கி கடனுதவி, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வசதிகள், இதன் மூலம் பெண்களுக்கு கிடைக்கும் வருமானம், மகளிரின் பொருளாதார மேம்பாடு ஆகியவை குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கேட்டறிந்தனர்.
அங்கன்வாடி மையம்
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம பஞ்சாயத்து சேவை மையத்தின் செயல்பாடுகளை நாடாளுமன்ற நிலைக்குழுவினர் கேட்டறிந்தனர்.
பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்றனர். அங்கு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கற்றல் முறை, வழங்கப்படும் உணவுகள், சமையலறை, குடிநீர் வசதி, சுற்றுப்புற சுகாதாரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பிறகு இ.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் பணியை அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வழங்க வேண்டிய உணவு வகைகள், அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும், சமையலறை, பாத்திரங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
கலந்துரையாடல்
பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் இலவச வீடுகள் கட்டி பயனடைந்த பயனாளிகளுடன், நாடாளுமன்ற நிலைக்குழுவினர் கலந்துரையாடினர். பயனாளிகளை தேர்வு செய்யும் முறை, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் சிலுக்குவார்பட்டியில் உள்ள ரேஷன்கடையை அவர்கள் பார்வையிட்டு, அங்கு வழங்கப்படுகிற அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்தும், பொருட்கள் இருப்பு பற்றியும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து சிலுக்குவார்பட்டியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீர் உறிஞ்சும் அகழிகளை நாடாளுமன்ற நிலைக்குழுவினர் பார்வையிட்டனர்.
ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவிகள்
இந்த ஆய்வை தொடர்ந்து மகளிர் குழுவினருக்கான கடனுதவி உள்ளிட்ட ரூ.34 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. பயனாளிகளுக்கு வழங்கினார்.
ஆய்வின்போது கலெக்டர் பூங்கொடி, திண்டுக்கல் எம்.பி.வேலுச்சாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சரவணன், உதவி திட்ட அலுவலர் சங்கமித்ரா, நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சவர்ணம், விஜய சந்திரிகா, தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், எத்திலோடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி, சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
--------