கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடல்


கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடல்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேலநீலிதநல்லூரில் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடல் நடத்தினார்.

தென்காசி

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் மன்றம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காரம், ஆங்கிலத்துறை தலைவர் ராமபாரதி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி.சீனிவாசன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.

தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகழ், நினைவை போற்றும் வகையில் கலைஞரால் இந்த கல்லூரிக்கு முத்துராமலிங்க தேவர் கல்லூரி என்று பெயர் வைத்து ஆரம்பிக்கப்பட்டது பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு கிடைத்த பெருமை. ஒருவருடைய பெயர் அவர் வாழும் வாழ்க்கை, செயல், மக்களுக்கு செய்யும் தொண்டுகள் ஆகியவைகளை வைத்து தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவார். மாணவ-மாணவிகள் உயர்கல்வி துறையில் முன்னேற வேண்டும் என கல்வித்துறையில் பெரும் புரட்சி செய்தவர் கலைஞர். தனது கடைசி காலம் வரை நாட்டுக்காக உழைத்தவர் கலைஞர். கலைஞரின் வழியில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க..ஸ்டாலின் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என்பது உண்மை என்றார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் கல்வியில் சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மாணவிகளுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஏற்பாட்டில் கல்லூரி வளர்ச்சி நிதிக்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. முடிவில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story