காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது.
காரைக்குடி,
ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் ஓம் சஷ்டி சேவா குழு சார்பில் ஏராளமான பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து மேள தாளத்துடன் புறப்பட்ட கஞ்சி கலய ஊர்வலத்தை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓம் சஷ்டி சேவா தலைவர் செந்தில்குமார், சித்தார்த்தன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் சரவணன், செயலாளர் நாகசுந்தரம், மல்லாக்கோட்டை ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ஜோதிசண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.