விபத்துக்கு வழிவகுக்கும்ஆபத்தான பாறைக்குழிகள்
காங்கயம் அருகே சாலையோரம் விபத்துக்கு வழி வகுக்கும் வகையில் ஆபத்தான பாறைக்குழிகள் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தடுப்புச்சுவர் ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாறைக்குழிகள்
காங்கயம், தாராபுரம் சாலையில் பொத்தியபாளையம் பிரிவில் இருந்து வீரணம்பாளையம் செல்லும் சாலையோரம் கைவிடப்பட்ட பாறை குழிகள் உள்ளன. இங்கு சுமார் 25 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக அதிகளவில் பாறைக்குழியில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைக்கு மிக அருகில் இந்த பாறை குழிகள் திறந்த வெளியில் உள்ளதாலும், அந்த பகுதயில் காற்று அதிகமாக வீசுவதாலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எதிரே கனரக வாகனங்கள் வரும்போது விலகிச் செல்ல நேர்ந்தால் நிலைதடுமாறி ஆபத்தான பாறைக்குழிக்குள் விழும் சூழல் உள்ளது. கடந்த காலங்களில் இவற்றில் சில விபத்துக்களும் ஏற்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
எனவே அசம்பாவிதம் நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பாறைக்குழிகளை ஆய்வு செய்து அவற்றிற்கு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.