கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம்
சேரன்மாதேவியில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவியில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம் காரையார், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகளில் இருந்து ஜூன் 1-ந்தேதி கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், அணைகளில் போதியளவு நீர்இருப்பு இல்லாத காரணத்தினால், ஜூலை 19-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் ஒரு சில தினங்களில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் கன்னடியன் கால்வாய் மூலமாக கல்லிடைக்குறிச்சியில் இருந்து கோபாலசமுத்திரம் வரை சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் கன்னடியின் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைப்பது தொடர்பாக, சேரன்மாதேவியில் உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. இதில் வருகிற 31-ந் தேதி விவசாயிகள் தங்களது வீட்டில் கருப்பு கொடியேற்றி தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், அன்று காலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பது எனவும், கால்வாயில் தண்ணீர் திறந்து விடாவிட்டால் அரசின் எந்த ஒரு மானியமும் வேண்டாம் என தெரிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதில் சங்க தலைவர் பாபநாசம், செயலாளர் கண்ணப்பநயினார் மற்றும் சேரன்மாதேவி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.