கண்ணமங்கலம் ஏரி மதகுகளை திறக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
கண்ணமங்கலம் ஏரி மதகுகளை திறக்க வேண்டும் என்று சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மேல்வல்லம் பகுதியில் உள்ள நாகநதி தடுப்பணை மூலம் 5 கிலோ மீட்டர் தூரம் நீர்வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது.
கடந்த ஆண்டு பெய்த மழையில் நிரம்பிய ஏரியில், இன்னும் தண்ணீர் குறையாமல் தேங்கி நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஏரி மதகுகள் மூடப்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இவைகளை திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை விவசாயிகள் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் கண்ணமங்கலம் பள்ளியில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணியை பார்வையிட வந்த சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம், ஏரி மதகுகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story