கண்ணபுரம் மாட்டுச்சந்தை கூடியது
வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் மாரியம்மன்கோவில் திருவிழாவையொட்டி மாட்டுச்சந்தை கூடியது. இதில் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
மாரியம்மன் கோவில் திருவிழா
வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், சித்ரா பவுர்ணமியையொட்டி விக்கிரம சோழீஸ்வர சாமி கோவில் தேர் திருவிழா நடைபெறும். இதைெயாட்டி மாட்டுச்சந்தை கூடும். இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்தும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். பல விவசாயிகள் வாங்கியும் செல்வார்கள்.
இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி நடைபெற உள்ளது. மே 5-ந் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
மாட்டுச்சந்தை
நிகழ்ச்சியையொட்டி இந்த ஆண்டு கடந்த 18-ந் தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத்தொடங்கி விட்டது. இந்த மாட்டுச் சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் வந்து தங்களுக்கு பிடித்த நாட்டு மாடு மற்றும் மாட்டு கன்று, காளைகளை வாங்கிச்சென்றனர். தொடர்ந்து 3 நாட்களில் இன்னும் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வரும், மாட்டுச்சந்தை இந்த மாத கடைசி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த மாட்டுச்சந்தையையொட்டி மாடுகளுக்கு தேவையான மூக்கு கயிறு, தலை கயிறு, தும்பு கயிறு, சாட்டை, மாடு கட்டும் கயிறு விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது மாடுகளுக்கு தேவையான கயிறு மற்றும் சாட்டைகளை வாங்கி சென்றனர்.