கன்னியாகுமரி: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தைக் குட்டி மீட்பு


கன்னியாகுமரி: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தைக் குட்டி மீட்பு
x

பிடிபட்ட சிறுத்தைக்குட்டி மிகவும் சோர்வாக இருந்ததால் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக கால்நடை மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சிற்றாறு ரப்பர் கழக மருந்தகத்திற்கு செல்லும் சாலையில் 7 வீடுகள் கொண்ட தொழிலாளர் குடியிருப்புகள் அமைந்துள்ளன. அதற்கான கழிப்பறைகள் அந்த பகுதியில் தனியாக வரிசையாக கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொழிலாளர் குடியிருப்பில் தங்கி இருந்த ஒருவர் நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது கழிப்பறை அருகே சிறுத்தை ஒன்று நின்று கொண்டிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பயந்து கூச்சலிட்ட அவர், அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்.

அவர் கூச்சலிட்டதில் மிரண்டு போன சிறுத்தையும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பின்னர் அங்கு விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் சிறுத்தை புகுந்தது. அங்கிருந்து தாவியதில் கொட்டகையில் போடப்பட்டிருந்த தார்ப்பாயில் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் சிறுத்தை தவித்துக்கொண்டிருந்தது. சத்தம் கேட்டு அங்கு திரண்டு வந்த மக்கள் சிறுத்தையின் மீது கூடையை வைத்து மூடினர். உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது அது சிறுத்தைக் குட்டி என்பது தெரியவந்தது. அந்த சிறுத்தைக் குட்டியை மீட்டு கூண்டில் அடைத்தனர். சுமார் 2 மணி நேரம் தார்ப்பாயில் சிக்கியிருந்த நிலையில் காலை 7 மணிக்கு சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டது. அது 4 மாத பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. தொடர்ந்து சீரோ பாயிண்ட் வன சோதனை சாவடி பகுதிக்கு கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) இளையராஜாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொதுவாக சிறுத்தைகள் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் பிடிபட்ட சிறுத்தைக்குட்டி மிகவும் சோர்வாக இருந்தது. இதனால் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக கால்நடை மருத்துவ குழுவினர், அங்கு வந்து மீட்கப்பட்ட சிறுத்தைக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த சிறுத்தைக் குட்டி யாரையும் தாக்கவில்லை. சிறுத்தைக் குட்டியை அதன் தாய் விட்டு பிரிந்து சென்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story