நா செத்தா யாரு வருவா...! தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்...!


x

நா செத்தா யாரு வருவா...! தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்...! தனியே இறந்து கிடந்த சோகம் உருக வைக்கும் உண்மை நிகழ்வு

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஸி (70), திருமணமாகதவர். அடைக்காகுழி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணி செய்தும், கூலி வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வந்தார்.

இவரது சகோதரன், சகோதரிகள் யாரும் இவரிடம் தொடர்பில் இல்லை. இந்நிலையில், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ரோஸியை பார்த்து நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்று ஏளனமாகப் பேசுவார்களாம். இது ரோஸியின் மனதில் வைராக்கியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டில் இவருக்குச் சொந்தமான ஒன்றரை சென்ட் நிலத்தில் தான் இறந்தால் அடக்கம் செய்ய சொந்த செலவில் கல்லறை கட்டி, பால் காய்ச்சு நடத்திவிட்டு அதன் அருகில் தான் வசிப்பதற்கு இரண்டு அறையும் கட்டி தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை ரோஸியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதை கவனித்த பொதுமக்கள் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ரோஸி இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோஸியை பார்த்ததாகவும், அதன் பிறகு பார்க்கவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர். வயதுமூப்பு காரணமாக ரோஸி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தனது இறுதிச் சடங்கிற்கும், இறப்பிற்கும் ஆறு வருடத்திற்கு முன்பே கல்லறை கட்டி

வைத்திருந்தவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story