காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்குடி
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொப்புடைய நாயகி அம்மன்
காரைக்குடியில் பிரசித்தி பெற்ற கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கடந்த 30-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 31-ந்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, 1-ந்தேதி முதல் யாக பூஜைகள் தொடங்கி 6 கால யாக பூஜைகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து நேற்று காலை மேளதாளம் முழங்க, அதிர்வேட்டுக்கள் ஒலிக்க, வானில் கருடன் வட்டமிட யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து கொண்டு விமான கோபுரத்தின் உச்சிக்கு சென்றனர்.
கும்பாபிஷேகம்
காலை 10.03 மணியளவில் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். அதன்பின் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. அதன்பிறகு கும்பாபிஷேகத்தையொட்டி மகா அபிஷேகம், தச தரிசனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவினையொட்டி தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக திருவிழாவின் முதல் நாள் இரவு தமிழக கூட்டுறவு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சுவாமி தரிசனம் செய்தார். விழாவில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி சொக்கலிங்கம், மாங்குடி எம்.எல்.ஏ., செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பா.ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகரமன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையாளர் வீர முத்துக்குமார், தொழில் அதிபர்கள் லட்சுமணன், லேனா பழனியப்பன், டாக்டர் லேனா முத்துக்குமரன், ரஞ்சன் மேத்தா, கருவிழி ராஜேந்திரன், கவுன்சிலர் மெய்யர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் மகேந்திர பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக சிறப்பு நிகழ்ச்சிகளை பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் நடத்தினார்.