கார்கில் போர் வெற்றி நினைவு தின ஊர்வலம்
கார்கில் போர் வெற்றி நினைவு தின ஊர்வலம் நடந்தது.
கடந்த 1999-ம் ஆண்டு இந்தியாவின் லடாக் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படையினர் கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்க ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் போரில் ஈடுபட்டது. 60 நாட்கள் நடைபெற்ற இந்த போர், கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்னர் ஜூலை மாதம் 26-ந் தேதி முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் ஊர்வலமாக சென்றனர். மகாமக குளத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நிறைவு பெற்றது. முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் மேஜர் கணேசன், செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை தொடர்ந்து கார்கில் போர் நினைவு தின பொதுக்கூட்டம் நடந்தது.