புதுப்பொலிவு பெறும் கரிகால்சோழன் நடைபாதை
புதுப்பொலிவு பெறும் கரிகால்சோழன் நடைபாதை
தஞ்சை புதுஆற்றின் இருகரைகளில் உள்ள கரிகால்சோழன் நடைபாதை புதுப்பொலிவு பெறுகிறது.
புதுஆறு
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் எனப்படும் புதுஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்துவிடப்படும். இதில் புதுஆறு தஞ்சை மாநகரின் மையப்பகுதி வழியாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வழியாக புதுக்கோட்டை மாவட்டம் வரை செல்கிறது.
இந்த புதுஆற்றில் காந்திஜிசாலையில் உள்ள பாலத்தில் இருந்து எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள பாலம் வரை ஆற்றின் இரு கரையிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைக்கு மாமன்னன் ராஜராஜசோழன் நடைபாதை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் ஒரு கரையில் உள்ள நடைபாதை மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. மறுகரையில் உள்ள நடைபாதை பயன்படுத்தப்படாமல் இருப்பதால் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
கரிகால்சோழன் நடைபாதை
இந்த நடைபாதையை போல் காந்திஜிசாலையில் உள்ள பாலத்தில் இருந்து பெரியகோவில் அருகே உள்ள புதுஆற்றுப்பாலம் வரை ஆற்றின் இருகரையிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைக்கு பேரரசன் கரிகால்சோழன் நடைபாதை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தாசில்தார் அலுவலக பின்புற பகுதி, பழைய கலெக்டர் அலுவலக பின்புறம் வழியாக இந்த நடைபாதை செல்கிறது. மற்றொரு கரையில் ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் வழியாக இந்த நடைபாதை செல்கிறது. இந்த நடைபாதையை பெரும்பாலும் யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்ததால் மதுஅருந்துவது போன்ற செயல்கள் நடைபெற்றன.
புதுப்பொலிவு பெறுகிறது
இந்தநிலையில் பழைய கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து செல்லும் வகையில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கரிகால்சோழன் நடைபாதை வழியாக அருங்காட்சியகத்திற்கு எளிதாக சென்று வர முடியும் என்பதால் அந்த நடைபாதையை சுத்தப்படுத்தி, முட்புதர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கரிகால்சோழன் நடைபாதை புதுப்பொலிவு பெற்று வருகிறது.
அந்த நடைபாதையை மறைத்து படர்ந்து இருந்த முட்கள் எல்லாம் வெட்டப்பட்டு, நடைபாதை சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கரிகால்சோழன் நடைபாதை என எழுதப்பட்டிருந்த எழுத்து அழிந்து காணப்பட்டது. தற்போது புதிதாக கரிகால்சோழன் நடைபாதை என எழுதப்பட்டுள்ளது.