மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது; கட்ட விட மாட்டோம் - அமைச்சர் துரைமுருகன் பேட்டி


மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது; கட்ட விட மாட்டோம் - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 20 July 2023 11:25 AM IST (Updated: 20 July 2023 11:35 AM IST)
t-max-icont-min-icon

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் கடிதம் வழங்கினார்.

புதுடெல்லி,

டெல்லியில், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் கடிதம் வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

காவிரி விவகாரம் தொடர்பாக, முதல்-அமைச்சரின் கடிதத்தை மத்திய மந்திரி கஜேந்திர ஷெகாவத்திடம் வழங்கினேன். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரிஉறுதி அளித்துள்ளார். நதிநீர் பங்கிட்டு வழங்குவதில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய மந்திரி அறிவுறுத்த வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, மாதம் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர், தற்போது வரை வழங்கப்படவில்லை. கர்நாடகா அரசு நீர் வழங்காததால் தமிழகத்திற்கு 22.54 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காவிரி தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் வாடும் நிலை உருவாகி உள்ளது. மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது, ஒருபோதும் கட்ட விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story