வேலூரில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம்


வேலூரில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம்
x

வேலூரில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி வீட்டின் முன்பாக விளக்கேற்றி பொதுமக்கள் கொண்டாடினர்.

வேலூர்

தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு கோவில் ராஜகோபுரத்தின் 7-வது நிலை, சன்னதிகள், கொடிமரம் முன்பு உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கார்த்திகை தீபம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்திகோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து ஜலகண்டேஸ்வரர், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகள் மற்றும் அண்ணாசாலை, மார்க்கெட் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வேலூர் சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி, ஓல்டுடவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மலை உச்சியில் இளைஞர்கள், அப்பகுதி பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பல வீடுகளின் முன்பாக வண்ண கோலங்கள் போடப்பட்டிருந்தன. அதன் அருகே அகல் விளக்கேற்றி பொதுமக்கள் வழிபாடு செய்தனர். சிலர் வீட்டுவளாகம், மாடியில் விளக்கேற்றினர்.

இளைஞர்கள் பட்டாசுகள், வாணவேடிக்கைகள் ஆகியவற்றை வெடித்து கார்த்திகை தீபத்திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.


Next Story