பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா


பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா
x

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. காலை 10 மணிக்கு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு உச்சிகால பூஜையும், உச்சிகால தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு கோவில் மேல்சாந்தி மேளதாளத்துடன் தனிப்படகில் சென்று விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள அம்மன் பாதத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு

பின்னர் மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து வருடத்தில் 5 முறை மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.


Next Story