கார்த்திகைதீப அகல்விளக்குகள்


கார்த்திகைதீப அகல்விளக்குகள்
x

கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

அரியலூர்

வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன்:- வருடத்திற்கு ஒரு முறை கார்த்திகை தீபத் திருவிழா பொங்கல் பண்டிகை போன்ற நேரங்களில் மட்டுமே மண்பாண்டங்கள் அதிக அளவு விற்பனை ஆகும். ஆனால் சமீப காலமாக பொதுமக்கள் பித்தளை வெண்கலம் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கல் திருநாளை கொண்டாடுவதும், சீன களிமண் அகல் விளக்குகளை பயன்படுத்துவதும் புதிதாக வந்துள்ள எலக்ட்ரானிக் அகல் விளக்குகளை பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இதனால் மண்பாண்டத்தை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் எங்களைப் போன்ற ஏழை கைவினைகள் வருமான வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் பாதிப்படைகிறோம்.

சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி கலியமூர்த்தி:- தமிழ்நாடு அரசு பல்வேறு கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதுபோல் மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நேரடியாக மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து அகல் விளக்கு மண்பானை சட்டி உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கி பண்டகசாலை அமைத்து அதன் மூலம் விற்பனை செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும். அல்லது பொங்கல் பொருட்கள் வழங்கும் போது ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒவ்வொரு பொங்கல் பானை வழங்க நடவடிக்கை எடுக்கலாம். மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக்கும் அகல் விளக்குகளை பயன்படுத்துவது வேண்டும் என்று மக்கள் மனதில் எண்ணம் தோன்ற வேண்டும். இல்லையென்றால் அடுத்த தலைமுறையில் மண்பாண்டம் தயாரிக்கும் எங்களை போன்ற தொழிலாளிகள் இல்லாமல் போய்விடுவார்கள்.

வாழ்க்கை தரம் உயர...

அரியலூரை சேர்ந்த இல்லத்தரசி அமுதா:- கார்த்திகை தீபம் அன்று மண் அகல் விளக்கு ஏற்றுவதால் தமிழர்களின் பாரம்பரியம். தமிழர்களின் ஒவ்வொரு திருவிழாவும் ஒரு காரண கர்த்தாவாகத்தான் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழாவின் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்கிறது. தீபத்திருவிழாவின்போது மண்பாண்டம் செய்பவர்களின் வாழ்க்கை தரம் உயர மண் அகல் விளக்கு வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர நம்மால் முடிந்த அளவு மண் அகல் விளக்கு வாங்கி ஏற்ற வேண்டும். மண் அகல் விளக்கு பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் உருவாகிறது. களிமண்ணில் நீர் ஊற்றி சூரிய ஒளியில் காயவைத்து காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு அகல் விளக்கு உருவாக்கப்படுகிறது. தீபஒளி ஏற்றும் போது ஒருவித பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

அரியலூரை சேர்ந்த இல்லத்தரசி பரிமளா:- மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கு ஏற்றும்போது அகல் விளக்கில் நீரைக் குறிக்கும் எண்ணெய் ஊற்றி சுவாசம் என்னும் வாயுவை குறிக்கும் திரி போட்டு நெருப்பு தத்துவத்தை குறிக்கும் விதமாக ஏற்றும் போது வெளிச்சம் என்றும் ஆகாயம் உருவாகிறது என்பது ஐதீகம். நம்மிடம் உள்ள தீமை எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை உருவாக்குகிறது. காலம் காலமாக ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒரே மாதிரியாக இறைவனை வழிபட வேண்டியும் மண் அகல் விளக்கு ஏற்றப்படுகிறது. எனவே மண்காக்க மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு ஏற்றுவோம் வாழ்வில் வளம் பெறுவோம். மெழுகுவர்த்தியோ, சீன விளக்குகளையோ பயன்படுத்த வேண்டாம்.

அகல் விளக்கு வியாபாரம் செய்யும் சீனிவாசன்:- பொதுமக்கள் மண் அகல் விளக்கு வாங்குவது படிப்படியாக குறைந்து வருகிறது. மக்கள் அகல் விளக்கு வாங்கி திரி போட்டு எண்ணெய் ஊற்றி பற்றவைப்பதற்கு பதிலாக எளிதாக மெழுகுவர்த்தி மற்றும் சீன விளக்குகளை பயன்படுத்துகின்றனர். இதனால் ஏழை மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கிறது. மேலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் கடைத்தெருவில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. இதனாலும் விற்பனை குறைவாக உள்ளது.


Next Story