நினைவகமாக மாற்றிய பெருமை கருணாநிதியையே சேரும்
எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீட்டை நினைவகமாக மாற்றிய பெருமை கருணாநிதியையே சேரும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீட்டை நினைவகமாக மாற்றிய பெருமை கருணாநிதியையே சேரும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
பாரதியும் திரை இசை பரதமும்
திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் "பாரதியும் திரை இசை பரதமும்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதியார் கவிதைகளை கொண்டு திரையில் வந்த பாடல்களுக்கு பரத நாட்டியம் மற்றும் தெருக்கூத்து நடனம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பரத நாட்டியம் மற்றும் தெருக்கூத்து நடனத்தை கண்டு ரசித்தார். தொடர்ந்து அவர் பரத நாட்டியம் ஆடிய மாணவிகளுக்கும், தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் குறும்படங்களாகவும், நாடகங்களாகவும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாரதியார் ஒரு தீர்க்கக்தரிசி. பாரதியார் கவிதை எழுதிய காலங்களில் திரை இசை இல்லை.
அந்த சமயம் கர்நாடக இசை தொடங்கிய காலமாகும். இன்றைய காலகட்டத்தில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் இசை அமைப்பாளர்கள் மெட்டு, ரிதம் அமைத்து கொடுத்தால் தான் பாடல் வரிகள் எழுத முடிகிறது.
பாரதியாரின் எட்டையபுரம் வீடு
ஆனால் பாரதியார் எழுதிய பாடல்கள் இன்றைக்கு கர்நாடக இசை, போக் இசை, மெல்லிசைக்கும் பொருந்துகிறது.
எதிர்காலத்தில் முப்பரிமாண இசைகள் வரும் என்று பாரதியார் அறிந்து இருந்த காரணத்தினால் தால் அவர் தீர்க்கக்தரிசியாக முன்கூட்டிய அதற்கு ஏற்ப பாடல்களை எழுதியுள்ளார்.
மேலும் அவருக்கு ஆன்மிகத்தின் மீது பற்று இருந்ததால் பராசக்தி, கண்ணன் வைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
முதன்முதலில் புகழ்பெற்ற நாடக கலைஞர் கிட்டப்பா என்பவர் தான் பாரதியாரின் பாடலை நாடகத்தில் பயன்படுத்தினார். அதன் பின்னர் மெய்யப்ப செட்டியார் 1931-ம் ஆண்டு பாரதியாரின் பாடல்களை திரைப்படங்களுக்கு பயன்படுத்த உரிமை பெற்றார்.
பழமையும், புதுமையும் இணைக்கும் பாலமாக பாரதியாரின் பாடல் இருப்பதால் அவரை மக்கள் கவி என்று அண்ணா குறிப்பிட்டார். பாரதியாரின் எட்டயபுரத்தில் உள்ள வீட்டை அரசின் சார்பில் விலைக்கு வாங்கி அதனை பலரும் பார்க்கும் விதமாக நினைவகமாக மாற்றிய பெருமை தமிழக முதல்- அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியையே சேரும்.
மகாகவி நாள்
பாரதியாரின் புகழ் நீண்ட காலத்திற்கு நிலைத்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் தற்போது தமிழக முதல்-அமைச்சர் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமின்றி பாரதியாரின் நினைவு நாளை மகாகவி நாளாக கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளார். பாரதியாரின் படைப்புகள் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமார், ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, தமிழ்நாடு திரைப்பட பிரிவு தலைமை தயாரிப்பாளர் ரவி, அருணை மருத்துவக்கல்லூரி முதல்வர் குணசிங், மருத்துவ கண்காணிப்பாளர் குப்புராஜ், தி.மு.க. நிர்வாகிகள் இரா.ஸ்ரீதரன், கார்த்திவேல்மாறன், அருணைவெங்கட், பிரியாவிஜயரங்கன் உள்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெ.சதீஷ் நன்றி கூறினார்.