நெல்லையில் கருணாநிதி சிலை அமைக்க நடவடிக்கை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சரவணன் பேச்சு


நெல்லையில் கருணாநிதி சிலை  அமைக்க நடவடிக்கை  மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சரவணன் பேச்சு
x

நெல்லையில் கருணாநிதி சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சரவணன் பேசினார்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லையில் கருணாநிதி சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சரவணன் பேசினார்.

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று ராஜாஜி கூட்டரங்கில் நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். நெல்லையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

வீதிகள் சீரமைப்பு

கவுன்சிலர் ராமகிருஷ்ணன் பேசுகையில், நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் விரைவில் நடைபெற உள்ளதால் ரத வீதிகளை சீரமைக்க வேண்டும், என்று கூறினார்.

நெல்லை டவுன் கல்லணை பள்ளிக்கூடத்தில் கூடுதல் கட்டிடம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுமாறும், கருணாநிதிக்கு நெல்லையில் சிலை அமைக்க வேண்டும் என்றும் உலகநாதன் வலியுறுத்தினார்.

சங்கர் பேசுகையில், சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் அமைக்க வேண்டும், என்று கூறினார்.

நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று சந்திரசேகர் வலியுறுத்தினார்.

பாதாள சாக்கடை திட்டம்

மேலப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் மேயர், துணை மேயர் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று ரசூல் மைதீன் கூறினார்.

பிரான்சிஸ் பேசுகையில், பாதாள சாக்கடை திட்டம் எந்த நிலையில் உள்ளது?. நெல்லை மாநகர பகுதியில் எத்தனை மனைகள் வரைமுறை செய்யப்பட்டுள்ளது?. இதன்மூலம் எவ்வளவு பணம் மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது?. அதனை அந்த பகுதி மக்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

ஆணையாளர் பேசுகையில், பாதாள சாக்கடை திட்டம் ரூ.600 கோடிக்கும் அதிகமான திட்டம் என்பதால் நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் நடைபெறும். மனைகள் வரைமுறை செய்யப்பட்டதில் ரூ.21 கோடியே 44 லட்சம் கிடைத்துள்ளது. இதில் ரூ.18 கோடியே 36 லட்சம் பார்வதி தியேட்டர் பகுதியில் இருந்து அருணகிரி தியேட்டர் பகுதி வரை சாலை அமைப்பதற்கு செலவிடப்பட்டுள்ளது. மீதி பணம் ரூ.3 கோடி உள்ளது என்றார்.

மார்க்கெட் கடைகள்

கதிஜா இக்லாம் பாசிலா பேசுகையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கொண்டாநகரத்தில் உள்ள 9 கிணறுகளில் 6 கிணறுகள்தான் செயல்படுகிறது. அதுவும் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கி விடுகிறது. எனவே அவற்றை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று கூறினார்.

ஷர்மிளா பேசுகையில், பாளையங்கோட்டை மார்க்கெட்டை நம்பி ஏராளமான வியாபாரிகள் உள்ளனர். அவர்களிடம் கடைகளை காலி செய்ய சொன்னால் தற்கொலை செய்யும் நிலைக்குதான் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மார்க்கெட் கடைகளை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.

அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பேசுகையில், பாளையங்கோட்டை மார்க்கெட் சம்பந்தமாக அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேசியுள்ளேன். அவர்களுக்கு ஜவகர் மைதானம் மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் மாற்று கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு கடை நடத்துபவர்களுக்குதான் மீண்டும் கடை வழங்கப்படும் என்றார்.

கருணாநிதி சிலை

மேயர் பி.எம்.சரவணன் பேசுகையில், நெல்லையில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். எனவே விரைவில் கருணாநிதிக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். நாங்கள் ஒவ்வொரு வார்டுக்கும் ஆய்வுக்கு செல்லும்போது, அங்கு தலா 10 மரக்கன்றுகள் நட வேண்டும். இதற்கு கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் மேயர்கள் படம் திறப்பு

முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் முன்னாள் மேயர்கள் படத்திறப்பு விழா நடந்தது முன்னாள் மேயர்களின் படங்களை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

முன்னாள் மேயர்கள் விஜிலா சத்தியானந்த், புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story