ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில்ஜெர்சி மாடு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனை
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் ஜெர்சி மாடு ஒன்று ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் ஜெர்சி மாடு ஒன்று ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
மாட்டுச்சந்தை
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 50 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 450 பசுமாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
ஜெர்சி மாடு
இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள்.
இதில் ஜெர்சி கலப்பின பசுமாடு ஒன்று ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விலை போனது. இந்த மாடு காலை, மாலை தலா 25 லிட்டர் பால் கொடுப்பதாக விற்பனைக்கு கொண்டு வந்தவர் தெரிவித்தார். இதை பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவர் தனது பண்ணையில் வைத்து வளர்ப்பதற்காக வாங்கிச்சென்றார். மற்ற மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விலைபோனது.
விற்பனை மந்தம்
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக கடந்த சில வாரங்களாக மாடுகள் விற்பனை மந்தமாக உள்ளது. இன்று (அதாவது நேற்று) நடைபெற்ற மாட்டுச்சந்தைக்கு ஏராளமான மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
தேர்தல் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், குறைவான அளவே வியாபாரிகள் வந்ததால் மாடுகளின் விற்பனை மந்தமாக இருந்தது. இதனால் வழக்கமான விலையை விட மாடுகளின் விலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை குறைவாக விற்பனை செய்யப்பட்டது' என்றனர்.