கரூர் மாநகராட்சி அலுவலகத்தை நீர்த்தேக்க தொட்டி ஒப்பந்த ஆபரேட்டர்கள் முற்றுகை


கரூர் மாநகராட்சி அலுவலகத்தை நீர்த்தேக்க தொட்டி ஒப்பந்த ஆபரேட்டர்கள் முற்றுகை
x

சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க வலியுறுத்தி நீர்த்தேக்க தொட்டி ஒப்பந்த ஆபரேட்டர்கள் கரூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கரூர்

முற்றுகை போராட்டம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்கு நீர்தேக்க தொட்டி ஒப்பந்த ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உரிய தேதிகளில் சம்பளம் வழங்காமல் காலம் தாழ்த்தி சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லையாம். இதனால் சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க வலியுறுத்தி கரூர் மாநகராட்சி அலுவலகத்தை சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் மாவட்ட துணைச்செயலாளர் தண்டபாணி ஆகியோர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நீர்த்தேக்க தொட்டி ஒப்பந்த ஆபரேட்டர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த நகர் நல அலுவலர் லட்சியவர்ணா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நாளை (அதாவது இன்று) மாலைக்குள் சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story