கரூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாத 11 கடைகளுக்கு சீல்
கரூர் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
வரி பாக்கி
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், திண்டுக்கல் ரோடு, மினி பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் வணிக நிறுவனம் மற்றும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கரூர் மினி பஸ் நிலையம் அருகே உள்ள 2 கடைகள், திண்டுக்கல் சாலையில் ஒரு கடை, கரூர் பஸ் நிலையத்தில் 8 கடைகள் என மொத்தம் 11 கடைக்காரர்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரு கடைக்கு தலா ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து 11 கடைக்காரர்களுக்கு மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பியும் பணத்தையும் செலுத்தவில்லையாம்.
11 கடைகளுக்கு சீல்
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 11 கடைகளுக்கும் சீல் வைப்பதற்காக மாநகராட்சி ஆய்வாளர், நகர அமைப்பு ஆய்வாளர் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சென்றனர்.
அப்போது கடைகளின் உரிமையாளர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், கரூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்ததாத 11 கடைகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் கரூர் பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.