ரத்தசோகை கண்டறியும் திட்டத்தில் கரூர் மாவட்டம் முன்னோடியாக உள்ளது: கலெக்டர் தகவல்


ரத்தசோகை கண்டறியும் திட்டத்தில் கரூர் மாவட்டம் முன்னோடியாக உள்ளது: கலெக்டர் தகவல்
x

ரத்தசோகை கண்டறியும் திட்டத்தில் கரூர் மாவட்டம் முன்னோடியாக உள்ளது என கலெக்டர் கூறினார்.

கரூர்

ரத்த சோகை கண்டறியும் முகாம்

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நேற்று உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஹீமோகுளோபின் ஒப்பீட்டு ஆய்வு தமிழகத்திலேயே முதன் முறையாக கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதற்கு முன்பாக, "உதிரம்உயர்த்துவோம்" திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் 25 ஆயிரம் மாணவியர்களிடையே ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு அவர்களில் 17 ஆயிரம் மாணவிகளுக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு அவர்களின் முடிவு பெறப்பட்டு அவர்களில் மிகக்குறைந்த ஹீமோகுளோபின் அளவு உள்ளவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆய்வு முடிவுகள்

இதன் தொடர்ச்சியாக எளிதாக ஹீமோகுளோபின் அளவு பரிசோதிக்கும் வகையிலும் மற்றும் அதன் முடிவுகள் 1 நிமிடத்தில் செய்யப்படும் கருவி மூலம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருவியில் மாணவ-மாணவிகளின் கையில் ரத்த மாதிரி சேகரித்து அதன் முடிவும், மாணவ, மாணவிகளின் ஹீமோகுளோபின் மீட்டர் முறையில் செய்தும் அதன் முடிவையும் ஒப்பீடு செய்யப்பட உள்ளது. எனவே, இதற்கென 3 ஆயிரம் மாணவ, மாணவிகளிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை இந்த முறையில் எடுக்கப்படும் 3 ஆயிரம் மாணவ- மாணவியர்களில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

முன்னோடி மாவட்டம்

ரத்தசோகை என்பது சாதாரண வியாதியாக தான் தெரியும் ஆனால் எல்லா பிரச்சி னைகளுக்கும் அதுதான் காரணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் ரத்தசோகை வராமல் தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும் அதற்கு இரும்புசத்து மிக்க காய்கறிகள், கீரைகள், இறைச்சி வகைகளை சாப்பிட வேண்டும். குடல் புழு மாத்திரை ஆண்டிற்கு 2 முறை சாப்பிட வேண்டும். மாணவிகள் கூச்சப்படாமல் உங்களது மாதவிடாய் காலத்தை சரியாக கண்காணித்து அது குறித்து பிரச்சினைகள் ஏற்பட்டால் தனது தாயிடமோ அதன் மூலம் மருத்துவரிடம் கூறி ஆலோசனைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல் வாரவாரம் வியாழக்கிழமை இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். இதன் மூலம் ரத்தசோகையை தடுக்க முடியும். இந்தியாவிலேயே ரத்தசோகை கண்டறியும் திட்டத்தில் முன்னோடி மாவட்டமாக கரூர் திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story