கரூர் உழவர் சந்தை இடமாற்றம்: பொதுமக்கள் ஏமாற்றம்


கரூர் உழவர் சந்தை இடமாற்றம்: பொதுமக்கள் ஏமாற்றம்
x

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கரூர் உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கரூர்

கரூர் உழவர் சந்தை

கரூர் உழவர்சந்தை பழைய பஸ்நிலைய பகுதியில் செயல்பட்டு வருகிறது. கரூர் உழவர்சந்தை 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு மொத்தம் 60 கடைகள் உள்ளன. கரூர் உழவர்சந்தைக்கு தினமும் சராசரியாக 120 விவசாயிகள் வருகை புரிகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் தினமும் வருகை புரிந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 18 மெட்ரிக் டன் வரை காய்கறிகள் வரத்து இருக்கும்.

தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு பண்டிகை நாட்களில் 150 முதல் 160 விவசாயிகள் வருகை புரிவார்கள். அப்போது 25 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து இருக்கும். இந்த உழவர் சந்தை தினமும் காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கரூர் உழவர்சந்தையை மேம்படுத்தும் வகையில் தண்ணீர் வசதி, கழிவறை வசதி, நடைபாதை சீரமைப்பு, கடைகளில் மேற்கூரைகள், தளங்கள் அமைப்பது, அலுவலகம் மேற்கூரை, தளங்கள் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

மாற்றம்

கரூர் உழவர் சந்தையில் தற்போது ரூ.48 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த பராமரிப்பு பணிகள் முடியும் வரை கரூர் உழவர்சந்தை தினமும் அதிகாலை 4.30 மணி முதல் காலை 8 மணி வரை தான் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கரூர் உழவர்சந்தை காலை 8 மணி வரை மட்டும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கரூர் உழவர்சந்தையில் உள்ள கடைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வருகிற 20-ந்தேதி வரை கரூர் உழவர்சந்தை வெங்கமேடு குளத்துபாளையம் உழவர்சந்தையில் தற்காலிகமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கரூர் உழவர்சந்தை நுழைவுவாயில் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் உழவர்சந்தைக்கு தினமும் வந்து காய்கறிகள் வாங்கி செல்லும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

1 More update

Next Story