கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆடி தெய்வ திருமண விழா


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆடி தெய்வ திருமண விழா
x

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

ஆடி தெய்வ திருமண விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று மகா அபிஷேக குழு சார்பில் 24-ம் ஆண்டு ஆடி தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 16-ந்தேதி பசுபதீஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முளைப்பாரி வைக்கப்பட்டு புனிதநீர் ஊற்றப்பட்டது.

நேற்று முன்தினம் கோவில் ராஜகோபுரத்திற்கு 108 அடி உயர பிரமாண்ட மாலை சாத்தப்பட்டது. அதன் பின்னர் சீர்தட்டு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், அலங்காரவள்ளி-சவுந்திரநாயகி அம்பாளுக்கும் தெய்வ திருமண விழா நேற்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நால்வர் அரங்கில் நடைபெற்றது.

மணக்கோலம்

இதையொட்டி ஹோமம் வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் ஓதப்பட்டன. பின்னர் திருமணத்திற்கான தாலியை தேங்காய் பழத்துடன் இருந்த தாம்பூலத்தட்டில் வைத்து பக்தர்களிடம் காண்பித்தனர். அதனை பக்தர்கள் தொட்டு வணங்கி கொண்டனர். இதைத்தொடர்ந்து மங்கல இசை வாத்தியங்கள் முழங்க கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி, அலங்காரவள்ளி- சவுந்திரநாயகி அம்பாளுக்கு தாலி கட்டி ஏற்று கொண்டார். அப்போது பக்தர்கள் ரோஜாப்பூ, மல்லிகை உள்ளிட்ட பூக்களை மணக்கோலத்தில் இருந்த சுவாமிகளின் மீது தூவி மகிழ்ந்தனர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதனைத்தொடர்ந்து மாலை மாற்றும் உற்சவம் நடந்தது. அப்போது கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி, அலங்காரவள்ளி- சவுந்திரநாயகி அம்பாள் ஆகியோரது கழுத்தில் இருந்த மாலைகள் அவர்களுக்குள்ளாகவே மாற்றி அணிந்து கொள்ளும் நிகழ்வு பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் பணத்தை சமர்ப்பித்து மணக்கோலத்தில் இருந்த சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

திருவீதி உலா

பின்னர் தமிழிசை பாடல்கள், சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சி, ஒயிலாட்டம் மற்றும் கும்மி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து மாலை 6 மணியளவில் பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலாவும், வாணவேடிக்கையும் நடைபெற்றது.திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு வேண்டுபவர்கள் உள்ளிட்டோர் இந்த தெய்வ திருமணத்தில் பங்கேற்றால் சுபகாரியம் நிகழும். பிரிந்த தம்பதியர் சேரவும், 16 பேறுகளை பெறவும் பசுபதீஸ்வரர் அருள்பாலிப்பார் என ஐதீகமாக கருதப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆடி தெய்வதிருமண விழாவில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story