கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா


கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
x

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

கரூர்

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜென்பேக்ட் துணைத்தலைவர் விஸ்வநாதன் வெங்கடராமன், நிகழ்ச்சி தொகுப்பாளரும், எழுத்தாளருமான ஈரோடு மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு கல்லூரியின் தலைவர் எம்.குமாரசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.முருகன் 2022-23-ம் ஆண்டிற்கான கல்லூரியின் சாதனைகளை உள்ளடங்கிய ஆண்டறிக்கையை எடுத்துரைத்தார்.

செயல் இயக்குனர் குப்புசாமி, தேடல் மற்றும் முயற்சி இல்லாமல் எதையும் எளிதில் அடைய முடியாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன், கல்லூரியில் முன்னெடுக்கும் வேலைவாய்ப்பு முயற்சிகள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தும், மாணவர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டும், தங்கள் திறமைகளை வளர்த்து கொண்டும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் விஸ்வநாதன் வெங்கடராமன், மாணவர்கள் தன் தனி திறமைகளை கண்டறிய வேண்டும், நேர்மையான மனநிலை மிகவும் இன்றியமையாதது மற்றும் செல்போன் பயன்பாடு சரியான வழியில் இருக்க வேண்டும் என்று தன் வாழ்க்கை அனுபவங்களை எடுத்து கூறினார்.

அதனை தொடர்ந்து ஈரோடு மகேஷ், மாணவர்கள் படிப்பிலும், வேலையிலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும், எந்த வேலையிலும் அதீத ஈடுபாடுடன் செயல்பட்டால்தான் வெற்றியடைய முடியும். முதல் வாய்ப்பை நுழைவு வாயிலாக எடுத்து கொண்டு மென்மேலும் முன்னேற பாடுபட வேண்டும் என்று பல பிரபலங்களின் வாழ்க்கை உதாரணங்கள் மூலம் பேசினார்.

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் பணிநியமன ஆணை, சிறந்த வெளிச்செல்லும் மாணவர்கள் மற்றும் கல்வியில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கல்லூரி அறங்காவலர் விஜயாராமகிருஷ்ணன், தொடர்பு மேலாளர் பிரபு, இணை நிர்வாக இயக்குனர் சரண், பிற துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story