சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை-கரூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை-கரூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

கரூர்

13 வயது சிறுமி

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சிறுமியின் அத்தை, அந்த சிறுமியை திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்க வைப்பதாக அழைத்து சென்று உள்ளார். அதன்படி அங்குள்ள பள்ளியில் அந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி அந்த சிறுமிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் அத்தை மகனான பொக்லைன் எந்திர டிரைவர் சேகர் (வயது 25), சிறுமிக்கு பரிசு பொருட்களை வாங்கி தருவதாக கூறி திருச்சிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு கூட்டி வந்து உள்ளார்.

பாலியல் பலாத்காரம்

அப்போது அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சேகர் மலேசியாவுக்கு வேலைக்கு செல்வதாக கூறியதுடன், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி சின்ன பனையூரில் உள்ள விநாயகர் கோவிலில் அந்த சிறுமிக்கு தாலி கட்டி உள்ளார். மேலும் திருமண வயதை அடைந்தவுடன் பெற்றோரிடம் நாம் திருமணம் செய்து கொண்டதை தெரிவித்து கொள்ளலாம். அதுவரை தெரிவிக்க வேண்டாம் எனக் கூறி அந்த தாலியை வாங்கிக்கொண்டார்.

இதற்கிடையே மலேசியா சென்று விட்டு கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி சொந்த ஊர் திரும்பிய சேகர் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

கைது

இதையடுத்து, ஈரோடு செல்வதாக கூறிய சேகர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமியை விட்டுள்ளார். இந்தநிலையில் சேகர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது அந்த சிறுமிக்கு தெரியவந்தது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறினார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கரூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். இதில் சிறுமியை பலாத்காரம் செய்த சேகருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். மற்றொரு வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் மெய்க்காவல் தண்டனையும் விதித்து இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து சேகரை போலீசார் கோர்ட்டில் இருந்து அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story