காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் திருவிழா
காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் திருவிழா நடைபெற்றது.
கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் பிரசித்திபெற்ற காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகபடிதாரர்கள் சார்பில், தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து கடந்த வாரம் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. நேற்று நடந்த இறுதி திருவிழாவில் கறம்பக்குடி, தென்னகர், தட்டாவூரணி, குளக்காரன்தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் குடத்தில் தென்னம் பாலைகளை வைத்து (மதுகுடம்) அலங்கரித்து தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாடகம், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவை நடைபெற்றன. கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.