வீட்டுமனைப்பட்டா கேட்டுவசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் காட்டு நாயக்கர் சமூகத்தினர் மனு


வீட்டுமனைப்பட்டா கேட்டுவசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் காட்டு நாயக்கர் சமூகத்தினர் மனு
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:15:59+05:30)

வீட்டுமனைப்பட்டா கேட்டு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் காட்டு நாயக்கர் சமூகத்தினர் மனு கொடுத்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட நாகம்மையார் தெருவில் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுமனைப்பட்டா மற்றும் ஜாதி சான்றிதழ் கேட்டு நீண்ட காலமாக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் காட்டு நாயக்கர் சமூகத்தினர் தியாகதுருகத்தில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 1974-ம் ஆண்டு முதல் சந்தைமேடு மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள நாகம்மையார் தெரு பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் வசித்து வந்த இடத்தை தற்போது தொல்பொருள் ஆராய்ச்சிக்காக மாநில அரசு எடுத்துக் கொண்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு உதயமாம்பட்டு சாலை அருகே பட்டா வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் இது வரை பட்டா வழங்கவில்லை. எனவே 30 குடும்பங்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் சமூகத்தை மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் பவித்ராவிடம் வீட்டுமனைப் பட்டா மற்றும் ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அப்போது கள்ளக்குறிச்சி தாசில்தார் (பொறுப்பு) பாலகுரு, தி.மு.க. நகர செயலாளர் மலையரசன், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலைவர் சங்கர், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, நகர துணை செயலாளர் அக்பர் உசேன், வார்டு கவுன்சிலர் சித்ரா அருட்செல்வன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.


Next Story