தனியாக நடந்து வரும் பெண்களை குறிவைத்து நகை பறிக்கும் நூதன திருட்டுக்கும்பல்; பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுமா?


தனியாக நடந்து வரும் பெண்களை குறிவைத்து நகை பறிக்கும் நூதன திருட்டுக்கும்பல்; பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுமா?

ஈரோடு

"ஒரு பெண் கழுத்தில் நகைகளை அணிந்து கொண்டு வீதிகள் வழியாக நள்ளிரவில் தனியாக சென்று பாதுகாப்பாக வீடு திரும்புகிறாரோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்" என்று மகாத்மா காந்தி கூறி உள்ளார். பெண்களின் பாதுகாப்பு அவசியம் குறித்து அன்றே காந்தி எடுத்துரைத்திருக்கிறார். ஆண்டுகள் பல கடந்தாலும், பெண்களின் பாதுகாப்பு என்பது இன்றளவும் கேள்விக் குறியாகத்தான் இருந்து வருகிறது.

வழிப்பறி, நகை பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஒருபுறம் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தாலும், பெண்களே தங்களுக்கு அபாயம் ஏற்படாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றுதான் காலம் காலமாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் ஜேப்படி திருடர்கள் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் காணப்படுவார்கள். அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று போலீசாரும் எச்சரிக்கை விடுத்து வந்தார்கள். ஆனால் டிஜிட்டல் மயம் காரணமாக பணப்பழக்கம் குறைந்துவிட்டது. மேலும், நகைகளின் விலை ஏற்றம் திருடர்களின் கவனத்தை நகையை நோக்கி திரும்பியது.

தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைப்பறிப்பு, செல்போன் பேசிக்கொண்டே செல்பவர்களிடம் வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதை காண முடிகிறது. எதிர்பாராத நேரத்தில் மர்மநபர்கள் நகைப்பறிப்பில் ஈடுபடுவது ஒரு புறம் இருந்தாலும், பெண்களை எளிமையாக ஏமாற்றி நூதன முறையில் நகைகளை அபேஸ் செய்யும் கும்பலின் நடமாட்டமும் காணப்படுகிறது.

குறிப்பாக கடைகளுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் பெண்களை நோட்டமிடும் டிப்-டாப் நபர்கள் அந்த பெண்களை அணுகி, தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்தி கொள்வார்கள். அப்போது திருட்டு சம்பவம் அதிகமாக நடப்பதால், தங்களது நகைகளை பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும் என்று கூறும் அவர்கள், நகைகளை ஒரு காகிதத்தில் மடித்து தருகிறோம் என்று நம்ப வைப்பார்கள்.

அப்படிப்பட்ட நபர்களை உண்மை போலீசாராகவே நம்பிய பெண்களும் தாங்கள் அணிந்த நகைகளையும் கழற்றி கொடுத்தார்கள்.

அப்போது பெண்களின் கவனத்தை சிதறடித்து வேறு ஒரு பொட்டலத்தை பெண்களிடம் டிப்-டாப் நபர்கள் கொடுத்துவிட்டு தப்பி சென்ற சம்பவம் பல்வேறு இடங்களில் அரங்கேறி உள்ளது. பாதுகாப்புக்காக நடந்து செல்லும் வழியில் பொட்டலத்தை பிரித்து பார்க்க வேண்டாம் என்று அந்த நபர்கள் கூறியதால், வீட்டுக்கு சென்ற பிறகு பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் நகைக்கு பதிலாக கற்கள் இருப்பதை பார்த்து பெண்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல் நகைகளுக்கு பாலீஸ் போட்டு தருவதாக நகைகளை அபேஸ் செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடிய சம்பவங்களும் நடந்து உள்ளன.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சம்பவம் நடந்து முடிந்த பிறகு எடுக்கப்படும் நடவடிக்கையை காட்டிலும், குற்ற சம்பவம் நடக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் குற்ற சம்பவங்களை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த முடியும். இதுதொடர்பாக ஈரோடு மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை காணலாம்.

வருமுன் காப்போம்

ஈரோடு சூளையை சேர்ந்த சித்ரா கண்ணன்:-

வழிப்பறி சம்பவம் என்பது திடீரென நடப்பதால், பெண்களால் உடனடியாக எதுவும் செய்ய முடியாமல் அதிர்ச்சி அடைகிறார்கள். எனவே வருமுன் காப்போம் என்பதைபோல பெண்கள் வெளியில் செல்லும்போது சுயவிழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அருகில் உள்ள கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது விலைஉயர்ந்த நகைகள் அணிவதை தவிர்க்கலாம். இதேபோல் ஜவுளி, நகை, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க செல்லும்போதும், அதிகமான பணத்தை எடுத்து செல்ல வேண்டிய நிலை வரும். அந்த சமயம் பணத்தை எடுத்து செல்வதை தவிர்த்துவிட்டு மின்னணு பணபரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும்.

இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. யாராவது மோதுவதுபோல் வந்தால், உடனடியாக பெண்கள் சுதாரித்து கொள்ள வேண்டும். தெரியாத நபர்கள் வாகனங்களை நிறுத்த சொன்னால், அதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி நகையை பறித்துவிட்டு தப்பி ஓடியவரின் மோட்டார் சைக்கிள் எண், அவரது அடையாளங்களையும் கண்காணிக்க வேண்டும். அதற்கு பெண்கள் மனதைரியத்துடன் செயல்பட கற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரோந்து பணி

ஈரோட்டை சேர்ந்த ரெயில்வே ஊழியர் ராஜா:-

சாலையில் நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி செய்யும் தகவல் சமீபகாலமாக அதிகமாக கேள்விப்படுகிறோம். இந்த சம்பவத்தை தடுக்க வேண்டும் என்றால், இரவு நேரங்களிலும், ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலும் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரியும் நபர்களை போலீசார் பிடித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த பகுதிகளில் பெண்களும் தனியாக நடந்து செல்வதை முடிந்தவரை தவிர்த்துவிட்டு, துணைக்கு நபரை அழைத்து செல்லலாம்.

ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளிட்ட பகுதியில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஒருசிலர் ஈடுபடுகிறார்கள். அங்கு போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மிளகாய் பொடி

ஈரோடு சின்னசேமூரை சேர்ந்த குடும்ப தலைவி பி.சாரதி:-

பெண்கள், வயதானவர்களை தள்ளிவிட்டு நகையை பறிக்கும் சம்பவத்தை வீடியோவிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் பார்க்கும்போது பதற்றம் ஏற்படும்.

இதுபோன்ற சம்பவம் நமக்கும், நம்மை சேர்ந்தவர்களுக்கும் ஏற்பட கூடாது என்று உறுதியாக இருப்பேன். எனவே தனியாக செல்லும்போது தங்க நகைகள் அணிவதை தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்வேன்.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, யாராவது மோட்டார் சைக்கிளில் நெருங்கி வந்தால் சுதாரித்து கொள்ள வேண்டும். எதற்கும் மிளகாய் பொடி எடுத்து செல்வது நல்லது. ஆபத்து எந்த நேரத்திலும் நேரலாம். எனவே மிளகாய் பொடி இருந்தால், நம்மால் எதிர்த்து போராட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story