இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்தும் மாணவிகள்: அரசு பள்ளிக்கூடங்களில் கழிப்பிட வசதி அத்தியாவசிய தேவை- சமூக ஆர்வலர்கள் கருத்து


இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்தும் மாணவிகள்: அரசு பள்ளிக்கூடங்களில் கழிப்பிட வசதி அத்தியாவசிய தேவை- சமூக ஆர்வலர்கள் கருத்து

ஈரோடு

நாளைய சமுதாயத்தை செதுக்கும் பட்டறைகளாக கல்விக்கூடங்கள் உள்ளன. அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி வேண்டும் என்கிற கோரிக்கைகள் இருந்தாலும் சர்வதேச பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டம், தமிழ்நாடு அரசு பாடத்திட்டம் என்று பல வகை பாடத்திட்டங்களில் தமிழ்நாட்டு மாணவ-மாணவிகள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி எதிர்காலத்தின் அடிப்படை என்பதால் பெற்றோர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தங்கள் குழந்தைகளை சேர்க்கிறார்கள்.

அரசு பள்ளிகள்

வசதி வாய்ப்பு இல்லாத, ஏழை-எளிய குடும்பத்து குழந்தைகளின் தேர்வாக அரசு பள்ளிக்கூடங்கள் மட்டுமே உள்ளன. அரசு பள்ளிக்கூடங்களில் கணினி முதல் காலணி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, தினசரி முட்டை, பல்வேறு விதமான கலவை சாதம் என்று அரசு பள்ளிக்கூடங்களில் வசதிகள் பல செய்யப்பட்டு உள்ளன.

கொரோனா பாதிப்பு, பொருளாதார பிரச்சினை ஆகியவற்றால் தொழில் நசிவு, வேலை இழப்பு ஆகியவை காரணமாக அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவியர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன், வகுப்பறை பற்றாக்குறையும் உள்ளது.

கழிப்பறை

இவை எல்லாவற்றையும் விட கழிப்பறை பற்றாக்குறை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசு பள்ளிக்கூடங்களில், குறிப்பாக அரசு மகளிர் பள்ளிக்கூடங்களில் மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. வகுப்பு இடைவேளையின் போது 10 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த குறுகிய நேரத்தில் மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிப்பது, இயற்கை உபாதை கழிப்பது என்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்த அளவில் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் இது சாத்தியம். ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இயற்கை கடன்களை கழிக்க முடியாமல் அடக்கி வைத்துக்கொள்கிறார்கள். இதனால் உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.

இதைபற்றி பள்ளிக்கல்வித்துறை கவலைப்படுகிறதா என்கிற கேள்வி எழுந்து உள்ளது. இதுபோல் அரசு பள்ளிக்கூடங்களில் இருக்கும் கழிவறைகளை தூய்மை செய்யும் பணியாளர்கள் இல்லை. இதனால் சுத்தம் செய்யப்படாத கழிப்பறைகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் ஒவ்வாமையால் பாதிக்கப்படுவதும் நடக்கிறது. இதற்கு அச்சப்பட்டு பெண்கள் பள்ளிக்கூட கழிவறைகளுக்கு செல்வதை தவிர்ப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-

எஸ்.சி.நடராஜ்

இதுபற்றி சுடர் அமைப்பு இயக்குனர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:-

பள்ளிக்கூடங்களில் மிக அத்தியாவசிய தேவை சுகாதாரமான கழிவறைகளாகும். முற்றிலும் நகரமயமாகி வரும் பல பகுதிகளில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள் இல்லை. குறிப்பாக சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் 1,300 மாணவிகள் படிக்கிறார்கள். இங்கு 20 கழிவறைகள் மட்டுமே உள்ளன. 10 நிமிடத்தில் 1,300 மாணவிகள் இங்கு சென்று தங்கள் இயற்கை கடனை முடிக்க முடியாது என்பது அனைவருக்குமே தெரியுமே... ஆனால் இதுபற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாணவியர் எண்ணிக்கையின் படி குறைந்த பட்சம் 50 கழிப்பறைகளாக அதிகமாக வேண்டும். இதுதொடர்பாக சமூக அமைப்புகள் வைத்த கோரிக்கையின் பேரில், சில நாட்களுக்கு முன்பு புதிதாக 50 கழிப்பறைகள் அமைக்க அனுமதி பெறப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் இப்படி கேட்டு பெற்றுக்கொண்டு இருக்க முடியாதே...

கழிவறைகளின் எண்ணிக்கை குறைவு என்பதை காட்டிலும், கழிப்பறைகளை தூய்மை செய்யும் பணியாளர்கள் இல்லை என்பது இன்னும் அரசு பள்ளிக்கூடங்களின் அவலமாகும். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிக்கூடங்களில் உள்ளாட்சித்துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கழிவறை தூய்மை பணி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த பணிகள் எந்த ஒரு பள்ளிக்கூடத்திலும் முறையாக நடப்பதில்லை. தலைமை ஆசிரியர்கள் கேட்கவும் முடிவதில்லை. எனவே ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் தூய்மை பணியாளர்கள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். அரசு பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் வசதி நவீனமயமாக்கப்பட்டால், இன்னும் மாணவ- மாணவிகள் சேர்க்கை அதிகமாகும்.

பரிமளா

ஆலத்துக்கோம்பை பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் பரிமளா கூறியதாவது:-

தூய்மை காவலர் என்ற பெயரில் நாங்கள் தூய்மை பணியில் ஈடுபடுகிறோம். எங்களுக்கு இதற்காக மாதம் தோறும் வெறும் ரூ.1,500 ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் விடுமுறை என்றால் ஊதியம் கிடையாது. 1,500 ரூபாய்க்கு 20- நாட்களுக்கு மேல் பணி செய்ய வேண்டியது உள்ளது. ஒரே கழிவறையில் பலரும் செல்வதால் கழிப்பறை சுத்தம் செய்வது மிகவும் சவாலான விஷயம். ஆனால், குறைந்த ஊதியத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பணி செய்வது சிரமமாக இருக்கும். ஆனாலும் நாங்கள் நிரந்தரப்படுத்தப்படுவோம் என்ற நம்பிக்கையில் பணி செய்கிறோம். தூய்மை பணியாளர்களுக்கான குறைந்த பட்ச அடிப்படை ஊதியம் வழங்கி, எங்களை பள்ளிக்கூடத்தில் பணி நிரந்தரப்படுத்தி, முழு நேர பணியாளர்களாக நியமித்தால் நாங்கள் உற்சாகத்துடன் பணிபுரிய முடியும். எனவே எங்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அதே நேரம் பள்ளிக்கூடங்களில் மிகக்குறைவான அளவிலேயே கழிப்பறைகள் உள்ளன. இதனால் பெண் குழந்தைகள் சிரமப்படுவதை பார்க்கிறோம். கூடுதல் கழிவறைகள் கட்டப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.சக்திவேல்

உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்க பொறுப்பாளர் கே.சக்திவேல் கூறியதாவது:-

அரசு பள்ளிக்கூடங்களில் தூய்மை பணியாளர்கள் பணியிடம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஏற்கனவே கிராமம் அல்லது நகர் பகுதிகளில் தூய்மை பணியை முடித்து விட்டு கிடைக்கும் ஒரு நேரத்தில் கடமைக்காக பணியாளர்கள் செல்கிறார்கள். அதனால் பெயரளவுக்கு மட்டுமே தூய்மை பணி செய்ய முடிகிறது. சில பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்தில் ஒன்று அல்லது 2 நாட்கள் மட்டுமே கழிப்பறைகள் தூய்மை செய்ய முடிகிறது. இது சுகாதாரமாக இருக்காது. எனவே உள்ளாட்சி பணியாளர்களை பள்ளிக்கூடங்களில் பயன்படுத்துவதை விட்டு, பள்ளிக்கூடங்களுக்கு என்று தனியாக தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். அத்துடன், கூடுதல் கழிப்பறைகளும் கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி பவதாரிணி

அரசு பள்ளிக்கூட மாணவி பவதாரிணி கூறியதாவது:-

நான் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளிக்கூடத்தில் வகுப்பு இடைவேளையில் கழிப்பறை செல்ல முடியாது. மிகவும் நெரிசலாக இருக்கும். அதிகம்பேர் ஒரே இடத்தில் செல்வதால் அங்கு செல்ல சிரமமாகவும் இருக்கும். அதைவிட, காத்திருந்து கழிப்பறை செல்வது என்றால் வகுப்புக்கு உடனடியாக செல்ல முடியாது. இந்த பிரச்சினையை தவிர்க்க, தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுகிறோம். இதனால் பல நேரங்களில் வயிற்றுவலி பாதிப்பு ஏற்படும். பெற்றோரிடம் கூறினால், அவர்கள் கழிப்பறைக்கு சரியாக செல்லும்படி கூறுகிறார்கள். ஆனால், போதிய அளவில் கழிப்பறை இல்லாதபோது நாங்கள் எப்படி செல்ல முடியும்?.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.கே.பழனிச்சாமி

சத்தியமங்கலத்தை சேர்ந்த எஸ்.கே.பழனிச்சாமி கூறியதாவது:-

அரசு பள்ளிக்கூடங்களில் கல்வி, உணவு, இலவச பொருட்கள் என்று அனைத்தும் கிடைக்கிறது. ஆனால், சுகாதாரம், தூய்மை ஆகியவை குறைவாக இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். ஏழைகள், வசதி வாய்ப்பற்றவர்கள்தான் படிக்கிறார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்கூடங்கள் மீது அக்கறை செலுத்தவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. அரசு பள்ளிக்கூடங்களில் படித்த பலரும் சாதனையாளர்களாக உயர்ந்து இருக்கிறார்கள். பதவிகளில் இருக்கும் ஏராளமானவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள்தான். ஆனால், இங்கு உள்ள சிக்கல்களை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை பார்க்கும்போது சற்று வருத்தமாக இருக்கிறது. பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை கூட தவிர்க்கும் நிலையை நினைத்தால் பெண் குழந்தைகளின் உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகும். எனவே அரசு பள்ளிக்கூடங்களில் நவீன கழிவறைகளை கூடுதலாக அமைக்க வேண்டும். தூய்மை பணியாளர்களை அதிகமாக மட்டுமின்றி நிரந்தரமாக பள்ளிக்கூடங்களில் நியமிக்க வேண்டும்.

சில அரசு பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சேர்ந்து சொந்த நிதியில் தூய்மை பணியாளர்கள் வைத்து உள்ளனர். ஆனால், ஊதியம் பற்றாக்குறையால் பணியாளர்கள் நிரந்தரமாக வருவதில்லை. இதை அரசு கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story