நோய் பரப்பும் கூடாரமாக மாறி விட்டது; பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கும் பேபி கால்வாய்- தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?


நோய் பரப்பும் கூடாரமாக மாறி விட்டது; பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கும் பேபி கால்வாய்- தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றாக இருப்பது காலிங்கராயன் வாய்க்கால். பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைக்கும் வகையில் சுமார் 8 நூற்றாண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு அமைக்கப்பட்டது இந்த வாய்க்கால். கொங்கு மண்ணின் ஒரு பகுதிக்கு ஆட்சியாளராக இருந்த காலிங்கராயர் என்பவர் கி.பி.1271-ம் ஆண்டு இந்த வாய்க்காலை வெட்டத்தொடங்கினார். 12 ஆண்டுகள் அணையுடன், வாய்க்கால் வெட்டும் பணியும் நடந்தது. கி.பி.1,283-ம் ஆண்டு தை மாதம் 5-ந் தேதி காலிங்கராயன் அணை மற்றும் வாய்க்கால் பாசனத்துக்காக திறக்கப்பட்டது. 740 ஆண்டுகள் பழமையான இந்த வாய்க்கால் இன்னும் சுமார் 16 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும் திட்டமாக உள்ளது.

சவால்

காலிங்கராயர் இந்த வாய்க்காலை வெட்டும்போது பல்வேறு சவால்களை சந்தித்து, 56½ மைல் தூரத்துக்கு வெட்டி சாதனை படைத்து உள்ளார். இடது கரைக்கு மட்டுமே மண்ணால் கரை அமைத்து இந்த வாய்க்கால் வெட்டப்பட்டு இருப்பது சிறப்பாகும். வாய்க்கால் பாசனம் விளைநிலங்களுக்கு சரியாக கிடைக்கும் வகையில் வாய்க்கால் வளைந்து நெளிந்து வெட்டப்பட்டு உள்ளது.

இதனால் இதற்கு கோணவாய்க்கால் என்ற பெயரும் உண்டு. 740 ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறந்த நீர் மேலாண்மை, வேளாண் பொறியியல் துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக காலிங்கராயன் வாய்க்கால் அமைந்து உள்ளது. காலிங்கராயன் பாளையத்தில் பவானி ஆற்றில் தடுப்பணை கட்டி பாசனத்துக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. 56½ மைல் (90.5 கி.மீ.) தூரம் ஓடும் வாய்க்கால் பாசனத்தை முடித்து கடைசியில் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறை கிராமத்தில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

பேபி கால்வாய்

இந்த வாய்க்காலின் கரைகள் மிக மிக பழமையானவை என்பதால் அதனை சீரமைக்கும் வகையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடந்தது. இதற்கு சுமார் ரூ.90 கோடி நிதி செலவிடப்பட்டது. அதுமட்டுமின்றி, காலிங்கராயன் வாய்க்காலில் சாய, தோல் ஆலை கழிவுகள், குடியிருப்பு பகுதிகளின் கழிவுகள் கலப்பதை தடுக்க ரூ.75 கோடியில் சுமார் 7½ கிலோ மீட்டர் தூரத்துக்கு பேபி கால்வாய் (துணை கால்வாய்) கட்டப்பட்டது.

இந்த பேபி கால்வாயில் கழிவுகளை ஓடவிட்டு, அதை சுத்திகரிப்பு செய்து தூய்மையான தண்ணீரை காவிரியில் கலப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், வெறுமனே கால்வாய் மட்டும் அப்போது பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்பட்டது.

கொசு உற்பத்தி

தற்போது இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமாக மாறி உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுகளில் அதிக அளவு பேபி கால்வாய்க்கு செல்கிறது. ஆனால், அது அங்கேயே தேங்கி மிகவும் துர்நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி இருக்கிறது. மேலும் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

கொசு உற்பத்தி, நோய்கள் பரப்பும் கூடாரமாக இது மாறி விட்டது. இதனால் வாய்க்காலை ஒட்டி குடியிருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக அவர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

நோய் பாதிப்பு

வைராபாளையம் தாத்தா பட்டறை பகுதியை சேர்ந்த மாரப்பன்:-

காலிங்கராயன் வாய்க்காலை ஒட்டிதான் எனது வீடு உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பேபி கால்வாய் கட்டும்வரை பெரிய அளவில் பிரச்சினை இல்லை. கழிவுகள் எங்கும் தேங்குவதில்லை. ஆனால், வாய்க்காலை காப்பாற்ற பேபி கால்வாய் கட்டுவதாக அறிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வாய்க்கால் தூய்மை அடைந்து விடும் என்று நம்பினோம். ஆனால், அதற்கு பிறகுதான் பிரச்சினையே தொடங்கியது. பேபி கால்வாய் கட்டிய பிறகு, காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் வறண்டாலும் ேபபி கால்வாய் வறண்டு போகாது. ஏனெனில் அதில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளும் குவிந்து கிடக்கிறது. கொசுக்கள் அதிக அளவில் உள்ளன. எங்கள் பகுதியில் பலரும் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பயன் இல்லை

நீரேற்று நிலையம் ரோடு பகுதியை சேர்ந்த டி.ஈஸ்வரி:-

பேபி கால்வாய் அமைக்கப்பட்டதில் இருந்து தூர்வாரப்படவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பெண்கள் துணிகள் துவைக்க காலிங்கராயன் வாய்க்கால் செல்வோம். ஆனால் இப்போதெல்லாம் அங்கு செல்ல முடிவது இல்லை. மழைக்காலத்தில் பேபி கால்வாயில் சாக்கடை நிரம்பி, காலிங்கராயன் வாய்க்காலில் கழிவு நீர் கலக்கிறது. இதனால் பேபி கால்வாய் வெட்டியும் பயன் இல்லாத நிலைதான் இருக்கிறது.

நோய் பிரச்சினை, கொசு தொல்லையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நாங்கள் பேபி கால்வாயை தூர்வார கவுன்சிலரிடம் கோரிக்கை விடுத்து உள்ளோம். எங்கள் பகுதி மக்களின் நலன் கருதி பேபி கால்வாய் தூர்வாரப்பட வேண்டும்.

பல ஆண்டுகளாக

ஓங்காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம்:-

காலிங்கராயன் வாய்க்காலுக்கும் எனது வீட்டுக்கும் 200 மீட்டர் தூரம்தான் இருக்கிறது. எந்த நேரமும் கொசு தொல்லையால் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். இந்த சுற்றுவட்டார மக்கள் அனைவரும் என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. 16-வது வார்டு கவுன்சிலரிடம் இதுபற்றி கோரிக்கை வைத்து இருக்கிறோம். அவரும் இதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார்.

கோரிக்கை

16-வது வார்டு கவுன்சிலர் ஈ.பி.ரவி:-

ஈரோடு மாநகராட்சியில் 14 மற்றும் 16-வது வார்டுகளை ஒட்டி பேபி கால்வாய் உள்ளது. நல்ல நோக்கத்துக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் முழுமைப்படுத்தாமல் பாதியிலேயே விட்டு விட்டனர். ஈரோடு மாநகராட்சி கழிவுகள் பேபி வாய்க்காலுக்கு வருகிறது. வாய்க்கால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் துறை ரீதியான ஒரு போட்டி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தால், கழிவு மாநகராட்சி பகுதியில் இருந்து வருகிறது. நாங்கள் தூய்மைப்படுத்த முடியாது என்கிறார்கள். மாநகராட்சியில் கோரிக்கை வைத்தால் வாய்க்கால் எங்களுக்கு சொந்தமில்லை என்கிறார்கள். வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தால், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. நிதியை பெற்றுத்தாருங்கள் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பொதுமக்களுக்கு மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்க மாநகராட்சி முழுமைக்கும் சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் இந்த நோய்கள் உற்பத்தியாகும் இடமே காலிங்கராயன் வாய்க்கால் பேபி கால்வாய்தான். அதனை தூர்வாரி தூய்மைப்படுத்தினாலே நோய்பரவலை தடுக்க முடியும். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்வு

ஈரோடு மாநகராட்சி 1-ம் மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி:-

பேபி கால்வாய் பிரச்சினையை நான் முழுமையாக அறிவேன். பொதுமக்களின் புகார், கவுன்சிலரின் கோரிக்கை ஆகியவற்றை தொடர்ந்து நேரடியாகவும் ஆய்வு செய்தேன். பேபி கால்வாய் தூர்வாரப்பட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன். மேயரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தூய்மை பணிக்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story