காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை


காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 9:12 AM GMT)

காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பக்ரீத் பண்டிகை

காயல்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று முஸ்லிம்கள் புத்தாடைகள் அணிந்து சிறப்பாக கொண்டாடினர். இதனை ஒட்டி காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காயல்பட்டினம் கிளை சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத்தொழுகையை மாநில பேச்சாளர் ஷரிப் நடத்தினார். மேலும் குத்பா பேரூரையும் அவரே நடத்தினார்.

நிகழ்ச்சியில் காயல்பட்டினம் கிளை தலைவர் சாகுல் அமீது, செயலாளர் மக்கின் பொருளாளர் பஷீர் அலி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஷாஜகான், காயல்பட்டினம் முஸ்லிம் பிரமுகர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குருவித்துறை பள்ளிவாசல்

இதேபோல், காயல்பட்டினம் குருவித்துறை பள்ளிவாசலில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனை மவ்லவி நோனா காஜா முயினுதீன் ஜிஸ்தி நடத்தினார்.

பெருநாள் குத்பா பிரசங்கத்தை மவ்லவி மக்கி ரஹ்மத்துல்லாஹ் பாஸி நடத்தினார். இத்தொழுகையில் பள்ளிவாசல் தலைவர் முத்து ஹாஜி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் மன்னர் பாஜூல்அஸ்ஹாப், காயல்பட்டினம் நகராட்சி துணை தலைவர் சுல்தான் லெப்பை, அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞர் ஐக்கிய முன்னனி செயலாளர் செய்து முஹம்மத் சாஹிப்மற்றும் ஜமாஅத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும், காயல்பட்டினத்தில் உள்ள காட்டு தைக்கா, பெரிய, சிறிய ஜூம்ஆ, சிறுநெய்னார், முஹிய்யதீன் பள்ளிவாசல்கள், மொகுதூம் ஜூம்ஆ பள்ளிவாசல், புதுப் பள்ளிவாசல், மரைக்கா பள்ளிவாசல், ஜூலானி பள்ளிவாசல், பிலால் பள்ளிவாசல், கடைப்பள்ளிவாசல் உட்பட 35 பள்ளிவாசல்கள், 25 மகளிர் தைக்காக்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத்தொழுகையின் போது உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உடன்குடி

உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தையடிதெரு, கூளத்தெரு, நைனா பிள்ளை தெரு, முகைதீன்புதுதெரு, சிதம்பரத்தெரு, பெரிய தெரு, சுல்தான்புரம். புதுமனை, மெய்யூர் முகைதின்பட்டினம், பரமன்குறிச்சி சீருடையாபுரம் மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.


Next Story