மினி கூவம் போல் மாறி வரும் கெடிலம் ஆறு


மினி கூவம் போல் மாறி வரும் கெடிலம் ஆறு
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை கழிவுநீரால் மினி கூவம் போல் மாறி வரும் கெடிலம் ஆறு துர்நாற்றத்தால் கடலூர் மாநகர மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறாா்கள்.

கடலூர்

சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவது, இயற்கையை அழிப்பது என மனிதன் காலங்காலமாக இயற்கைக்கு எதிரான செயல்களையே செய்து கொண்டிருக்கிறான். பழங்காலத்தில் மரங்களை வெட்டி வயல்களை பெருக்கிய மனிதன், தற்போது வன வளங்களை அழித்து வருகிறான்.

கெடிலத்துக்கு கூவத்தின் நிலை

அதுபோல் பல்லாயிரக்கணக்கான ஆண்டாக மனித வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த நீர்நிலைகள் தற்போது மனிதனின் செயலால் மாசுபட்டு அழிந்து வருகின்றன. ஒவ்வொரு பெரு நகரத்திலும் ஒரு நதி ஓடும். ஆனால் நகரின் மையப்பகுதியில் ஓடும் நதிகள், வாய்க்கால்களின் நிலை தற்போது மிக மோசமாகி வருகிறது. காரணம் நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், குப்பைகள், மருத்துவ கழிவுகளால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் தான் சென்னையில் ஓடும் கூவம் நதி சாக்கடையாக மாறி பல ஆண்டுகள் ஆகிறது.

கூவம் என்றாலே அனைத்து மக்களும் மூக்கை மூடிக்கொள்வார்கள். அந்தளவுக்கு அந்த நதி மாசடைந்துள்ளது. கூவத்துக்கு ஏற்பட்ட அதே நிலை தான் தற்போது கடலூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றுக்கு ஏற்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடையில் உடைப்பு

ஆம், கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் 27 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. 9 வார்டுகளில் பகுதியாக பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், 9 வார்டுகளில் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தான் தேங்கி நிற்கிறது. மேலும் பல இடங்களில் பாதாள சாக்கடை இருந்தும் முறையாக பராமரிக்கப்படாததால், மேன்கோல் வழியாக வெளியேறி சாலையில் தான் ஆறாக ஓடுகிறது.

உதாரணமாக, கடலூர் திருப்பாதிரிப்புலியூர், வண்டிப்பாளையம் பகுதியில் இருந்து வரும் பாதாள சாக்கடை குழாய் எஸ்.என்.சாவடி வழியாக செல்கிறது. அந்த பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் அனைத்தும் எஸ்.என்.சாவடியில் உள்ள வடிகால் வாய்க்கால் வழியாக வழிந்தோடுகிறது. இந்த கழிவுநீர் மோகினி பாலம் வழியாக கெடிலம் ஆற்றில் கலக்கிறது. ஏற்கனவே மாசடைந்து காணப்படும் கெடிலம் ஆறு, தற்போது பாதாள சாக்கடை கழிவுநீரால் மினி கூவம் போல் மாறி வருகிறது.

பலகீனமடையும் வீடுகள்

இதுதவிர வடிகால் வாய்க்கால் வழியாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் குடியிருப்பு பகுதியிலும் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சோற்றில் கை வைத்தாலே, அவர்களுக்கு அங்கு வீசும் துர்நாற்றத்தின் காரணமாக சாப்பிட கூட முடியாமல் தவிக்கின்றனர். மேலும் வீடுகளை சுற்றிலும் நீண்டநாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுவர்கள் சேதமடைந்து வீடுகள் அனைத்தும் பலகீனமடைந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலமுறை புகார் அளித்தும், இதுவரை உடைந்த பாதாள சாக்கடை குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

நினைவுக்கு வரும் கூவம்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் வடிகாலில் வழிந்தோடுகிறது. மனித கழிவுகள் அனைத்தும் வீடுகளின் முன்பு தேங்கி கிடப்பதால், குடலை பிரட்டும் அளவுக்கு துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் பன்றிகளும் அதிகளவில் அந்த கழிவுநீரில் புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதியிலேயே படுத்து கிடக்கின்றன. இதனால் எங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவி வருகிறது. வடிகாலை பார்த்தாலே சென்னை கூவம் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுகள் அனைத்தும் நேரடியாக கெடிலம் ஆற்றில் தான் கலக்கிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பொதுமக்கள் நலன்கருதி உடைந்த பாதாள சாக்கடை குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story