கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வையுங்கள் - தமிழக அரசுக்கு நளினி கோரிக்கை


கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வையுங்கள் - தமிழக அரசுக்கு நளினி கோரிக்கை
x

அகதிகள் முகாமில் உள்ள கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வைக்க தமிழ்நாடு அரசுக்கு நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர் நேற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தனர். வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து முதலில் நளினி வெளியே வந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பி3ல் நளினி கூறியதாவது:-

கணவர் முருகனுடன் இருக்க அனுமதி கேட்டுள்ளேன். அகதிகள் முகாமில் உள்ள கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வைக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். நான் சிறைக்கு சென்ற நாளில் இருந்தே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நம்பிக்கையுடன் இருந்தேன். சிறைக்குள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்த தருணங்கள் ஏராளம்.

அனைவருக்கும் தூக்கு தண்டனை ரத்தாக வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. விடுதலைக்கு உதவிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராஜீவ் காந்தி குடும்பத்தினரை பார்ப்பதற்கு எனக்கு தயக்கமாக உள்ளது. இந்த குண்டு வெடிப்பில் பிரதமரே உயிரிழந்தது வருத்தத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருத்தப்படுகிறேன். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம். நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன். நான் விடுதலையானதற்கு, சிறை காவலர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம். தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இந்த 10 மாத பரோல் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story