கீரமங்கலம் மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


கீரமங்கலம் மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x

தீபாவளி பண்டிகையையொட்டி கீரமங்கலம் மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. காட்டுமல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

மலர் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், பாண்டிக்குடி, பெரியாளூர், குளமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, மாங்காடு, வடகாடு, அணவயல், நெய்வத்தளி மற்றும் கீரமங்கலத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மலர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் வம்பன், மறவன்பட்டி, சம்மட்டிவிடுதி, காயாம்பட்டி, ராயப்பட்டி, மழையூர் மற்றும் திருவரங்குளம் பகுதி கிராமங்களிலும் மலர்களின் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஏராளமான விவசாயிகள் மலர் உற்பத்தியையே பிரதான விவசாயமாக செய்து வருகின்றனர்.

பெரிய மலர் சந்தை

கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி திருவரங்குளம் பகுதி விவசாயிகளும் தாங்கள் சாகுபடி செய்யும் மலர்களை திருச்சிக்கு அடுத்தப்படியாக உள்ள பெரிய மலர் சந்தையான கீரமங்கலத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சராசரியாக ஒவ்வொரு நாளும் காலை 5 மணி முதல் 11 மணி வரை மலர்கள் விற்பனை நடக்கும்.

இந்த நேரங்களில் மலர் கமிஷன் கடைகளுக்கு மூட்டை மூட்டையாக செண்டி, பச்சை, சம்பங்கி, ரோஜா, கோழிக்கொண்டை, அரளி, வாடாமல்லி, மல்லி, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லி உள்ளிட்ட சுமார் 5 டன் அளவில் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

கீரமங்கலம் மலர் சந்தையில் உள்ள கமிஷன் கடைகளில் பூக்களை வாங்கிச்செல்ல தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, வேதாரண்யம், திருவாரூர், முத்துப்பேட்டை, நாகப்பட்டினம் மற்றும் ஏராளமான ஊர்களில் இருந்தும் பூ வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக மலர்களின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் பண்டிகை காலங்களில் சில நாட்களுக்கு விலை உயரும்.

அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. நேற்று காட்டுமல்லிகை கிலோ ரூ.1,000-க்கும், முல்லை கிலோ ரூ.600-க்கும், மல்லி, கனகாம்பரம் பூக்கள் கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.30-க்கும், ரோஜா கிலோ ரூ.80-க்கும் விற்பனை ஆனது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூக்கள் விலை மேலும் அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story