கேரள தொழில் அதிபர் சோலையாற்றில் மூழ்கி பலி
வால்பாறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த கேரள தொழில் அதிபர் சோலையாற்றில் மூழ்கி பலியானார். குளித்துக்கொண்டு இருந்த போது சுழலில் சிக்கினார்.
வால்பாறை,
வால்பாறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த கேரள தொழில் அதிபர் சோலையாற்றில் மூழ்கி பலியானார். குளித்துக்கொண்டு இருந்த போது சுழலில் சிக்கினார்.
ஆற்றில் குளித்தனர்
கேரள மாநிலம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் மன்சூர் (வயது 38). இவர் குவைத் நாட்டில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குவைத்தில் இருந்து கேரளாவுக்கு வந்தார். இதையடுத்து மன்சூர் தனது மனைவி, 2 குழந்தைகள், உறவினர்களுடன் நேற்று முன்தினம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தார். நேற்று மன்சூர் வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தார்.
பின்னர் சோலையாறு எஸ்டேட் அருகே சோலையாற்றில் இறங்கி மன்சூர் மற்றும் அவரது குடும்பத்தினர் குளித்தனர். அவரது மனைவி, குழந்தைகள் குளித்து விட்டு கரையில் அமர்ந்து இருந்தனர். மன்சூர் மட்டும் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சுழல் உள்ள ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதற்கிடையே மன்சூரை சுழல் உள்ளே இழுத்ததால், அவர் வெளியே வர முடியாமல் தவித்தார். அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தனர். இருப்பினும் மன்சூர் தண்ணீரில் மூழ்கினார்.
பிணமாக மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை போலீசார், மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மன்சூரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆற்றில் மூழ்கியவர்களின் உடலை மீட்கும் சண்முகம் என்பவர் வரவழைக்கப்பட்டார்.
அவரது உதவியுடன் போலீசார் மன்சூரை தேடினர். நீண்ட நேரத்துக்கு பிறகு சோலையாற்று சுழலில் சிக்கி மூழ்கிய மன்சூரை பிணமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.