நகைக்கடையில் கொள்ளையடித்த கேரள ஆசாமி கைது
கோவை அருகே காரமடையில் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கேரள ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 21 பவுன் தங்க நகை, ½ கிலோ வெள்ளி மீட்கப்பட்டது.
காரமடை,
கோவை அருகே காரமடையில் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கேரள ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 21 பவுன் தங்க நகை, ½ கிலோ வெள்ளி மீட்கப்பட்டது.
நகைக்கடையில் கொள்ளை
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மரியாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51). இவர் காரமடை கார் நிறுத்தம் அருகே சோலையன் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையை செந்தில்குமாரின் மனைவி சாந்தாமணி நிர்வகித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அதிகாலையில் செந்தில்குமாரின் நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அருகில் உள்ள வியாபாரிகள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு செந்தில்குமார் மற்றும் அவருடைய மனைவி சாந்தாமணி விரைந்து வந்தனர். அவர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது நகைக்கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 21¾ பவுன் தங்கம், ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார் நகைக்கடையை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையனை பிடிக்க காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் இப்ராகிம், தியாகராஜ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் நகைக்கடை அமைந்துள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காரமடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீசாரை பார்த்தும் ஒருவர் தப்பியோட முயன்றார். இதனைக்கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கேரள ஆசாமி கைது
இந்த விசாரணையில், அவர் கேரள கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தங்கச்சன் மேத்யூ (54) என்பதும், இவர் காரமடையில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளியை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்த 21¾ பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த தங்கச்சன் மேத்யூ மீது கேரள மாநிலத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைக்கடையில் கொள்ளையடித்தவரை விரைந்து கைது செய்த காரமடை போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.