ஓணம் பண்டிகை கொண்டாடிய கேரள மக்கள்
ஓணம் பண்டிகை கொண்டாடிய கேரள மக்கள்
கோவை
கோவையில் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கேரள மக்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். அப்போது அவர்கள் நண்பர்களுக்கு விருந்து கொடுத்தும் மகிழ்ந்தனர்.
ஓணம் பண்டிகை
தமிழக-கேரள எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் ஏராளமான கேரள மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே பண்டிகையை வரவேற்க தொடங்கி, தங்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.
அதன்படி நேற்று ஓணம் பண்டிகை என்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள கேரள மக்கள் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து அருகில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினார்கள்.
கோவிலில் சாமி தரிசனம்
பின்னர் அவர்கள் தங்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு மாவேலி மன்னன் மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்று இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். நேற்று கோவையில் உள்ள சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் காலை முதலே கேரள மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். சிலர் தங்களின் நீண்டகால நண்பர்களுடன் பேசி மகிழ்ந்ததுடன், அவர்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தனர்.
அத்தப்பூ கோலம்
மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த கோவிலில் 500 கிலோ பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிடப்பட்டு இருந்தது. இந்த கோலம் அங்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதை பார்த்து மகிழ்ந்தவர்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்ததுடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.
அத்துடன் பலர் தங்கள் வீடுகளில் அறுசுவை விருந்து செய்து அருகில் குடியிருப்பவர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து இந்த பண்டிகையை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். சில இடங்களில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.
உணவு பரிமாறினர்
அத்துடன் சிலர் ஏழை-எளிய மக்களுக்கு உணவு, உடை ஆகியவற்றையும் கொடுத்தனர். ஒருசிலர் தங்களது நண்பர்களை இல்லத்துக்கு அழைத்து அவர்களுக்கு கசப்பை தவிர அத்தனை சுவைகளிலும் கூட்டு, பொரியல் வைத்து உணவு பரிமாறி மகிழ்ந்தனர்.
இந்த பண்டிகையை முன்னிட்டு நேற்று கோவை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் பெரும்பாலான கேரள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் சேர்ந்து அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்து இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள்.